UPDATED : ஜன 23, 2025 02:08 AM
ADDED : ஜன 22, 2025 10:23 PM

சென்னை:'குற்றச் செயல்களில் காவல் துறையினரே ஈடுபடும் வழக்குகளை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வழிப்பறி வழக்கில் கைதான போலீசார் உள்ளிட்டோரின் ஜாமின் மனு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.
சென்னை, வண்ணாரப்பேட்டையைச்சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கத்திமுனையில் கடத்தி, 20 லட்சம் ரூபாய் பறித்ததாக, திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்.ஐ., ராஜாசிங், வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் உள்ள அவர்கள், ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜா சிங் உட்பட நான்கு பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அரசு வழக்கறிஞர் லியோனார்ட் அருள் ஜோசப் செல்வம் ஆஜராகி, ''இந்த வழக்கில், சிறப்பு எஸ்.ஐ., சன்னி லாய்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை நிறைவு பெறவில்லை. கைதான சிறப்பு எஸ்.ஐ.,யை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது உள்ளதால், ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்,'' என்றார்
இதை ஏற்று, வழக்கின் விசாரணையை, வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதி, 'வேலியே பயிரை மேய்ந்தது போல, போலீசாரே குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை, சாதாரண வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது' என்றார்.