இதற்குகூட நமக்கு சுதந்திரமில்லையே சீமான் கட்சியினர் புலம்பல்
இதற்குகூட நமக்கு சுதந்திரமில்லையே சீமான் கட்சியினர் புலம்பல்
ADDED : ஜன 11, 2025 06:52 PM
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை தொடர்பாக, நீதி கேட்டு துண்டறிக்கை கொடுக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினருக்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்.
சென்னை புத்தகக் காட்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற புத்தக வெளியிட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதில், வேறு பாடல் ஒலிபரப்பப்பட்டது. மேலும், புத்தகக் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி பாதை குறித்து, சீமான் பேசியதும் சர்ச்சையானது. இதற்கு, நிகழ்ச்சியை நடத்தும், 'பபாசி' நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறையில், ஞானசேகரன் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பாதிக்கப் பட்ட மாணவி அளித்த புகாரில், 'சார் சார்' என ஞானசேகரன் யாரிடமோ பேசினார் என குறிப்பிட்டு இருந்ததால், மற்றொரு நபருக்கும் வழக்கில் தொடர்பு இருக்கலாம் என, பல்வேறு தரப்பினர் சந்தேகித்து வருகின்றனர்.
இதனால், சட்டசபை முதல் பல்வேறு இடங்களில், எதிர்க்கட்சிகள், 'யார் அந்த சார்' என 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை தொடர்பாக நீதி கேட்டு, புத்தகக் கண்காட்சிக்கு வருவோரிடம், நேற்று துண்டறிக்கை அளிக்க, நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்தனர்.
இதற்காக, போலீசாரிடம் முறைப்படி அனுமதி கோரினர். ஆனால், அதற்கு போலீசார் அனுமதி மறுத்து செய்து விட்டனர். இதனால், நீதிக் கேட்டு துண்டறிக்கை வழங்கும் பரப்புரையை கடைசி நேரத்தில் ரத்து செய்வதாக, நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.
இது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் உள்ளது என கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவராக இருந்த பாலகிருஷ்ணன் வெளிப்படையாக கூறினார். இதற்கு, தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கம்யூ., கட்சியை விமர்சித்து, முரசொலி இதழில் கட்டுரை வெளியிட்டனர்.
ஆனால், அப்படியொரு சூழல் தான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. அரசுக்கு எதிராக எந்தவிதமான போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ எதிர்கட்சிகள் சார்பில் நடத்தக் கூடாது என்று அறிவிக்கபடாத செயல்பாட்டை வைத்துள்ளனர். ஆளுகட்சியின் கூட்டணி கட்சியினருக்கும்கூட இதே நிலை தான்.
அண்ணா பல்கலை மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன் கொடுமை தொடர்பாக, நாம் தமிழர் கட்சி சார்பில் புத்தக் கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு முன், துண்டறிக்கை கொடுக்க திட்டமிட்டோம். இதற்கான அனுமதியையும் போலீசார் மறுத்து விட்டனர். துண்டறிக்கை வழங்க கூட தமிழகத்தில் சுதந்திரமில்லாத ஒரு நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-