எத்தனையோ அவமானங்கள்; குறைந்தபட்ச மரியாதை கூட இல்லை: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் வேதனை!
எத்தனையோ அவமானங்கள்; குறைந்தபட்ச மரியாதை கூட இல்லை: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் வேதனை!
UPDATED : மே 19, 2025 08:50 PM
ADDED : மே 18, 2025 11:09 PM

''கிறிஸ்துவர்களின் கோரிக்கைகளை, அரசு அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை; குறைந்தபட்ச மரியாதையை எதிர்பார்க்கிறோம்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் பேசியது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிகோ இருதயராஜ் தலைமையில் இயங்கி வரும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தி.மு.க., கூட்டணியில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவமானம்
கடந்த 15 ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் இடம் பெற்று வருகிறது. இந்த இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடந்தது.
கூட்டத்தில், இனிகோ இருதயராஜ் பேசியதாவது: கிறிஸ்துவ மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட பின்னரும், அரசு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை; நம்மை எதிரிகளாக பார்க்கின்றனர். எத்தனையோ முறை அவமானங்களை சந்தித்துள்ளேன். அவர்களிடம் கெஞ்சியும், கையேந்தியும் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். நான் பட்ட அவமானங்களை, நேரம் வரும்போது விளக்கமாக பேசுவேன்.
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை; அதிகாரப் பகிர்வு கேட்கவில்லை. குறைந்தபட்சம் மரியாதையையும், மாண்பையும் எதிர்பார்க்கிறோம். அதுவும் கிடைக்கவில்லை; சுயமரியாதை இழந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. நம்மை கேலி, கிண்டல் செய்வோருக்கு, பாடம் கற்பிக்க வேண்டும். சட்ட சபை தேர்தல் வரப்போகிறது. கிறிஸ்துவர்களின் ஓட்டுகள், தமிழக அரசியல் கட்சிகளுக்கெல்லாம் தேவைப்படுகின்றன.
கட்சிகளின் பார்வை கிறிஸ்துவர்கள் பக்கம் விழுகிறது. கிறிஸ்துவர்களின் ஓட்டுகளுக்கு 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. உபதேசியார் நல வாரியம் அறிவித்ததோடு சரி; எந்த பணிகளும் நடக்கவில்லை.
நுண் அரசியல்
சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி, கல்லுாரிகளில், ஆசிரியர்கள், பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை. கிறிஸ்துவர் என்பதால், சகாயம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு பாதுகாப்பு கேட்டு கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது. மாநில நிர்வாகிகள் பேசுகையில், 'சட்டசபை தேர்தலில் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர் பதவிகளை பெற வேண்டும் என்றனர்.
தமிழகத்தில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் உள்ளதால், கண்டிப்பாக நிறைவேறும் காலம் வரும். அனைத்து திருச்சபைகளும் ஒருங்கிணைந்த அமைப்பாக, ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
'வரும் 2026 சட்டசபை தேர்தலில், கிறிஸ்துவர்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில், கடந்த காலங்களில் சில அரசியல் நபர்களால் நமக்கு எதிராக அங்கேற்றப்பட்ட, நுண் அரசியல் நடவடிக்கைகளை, மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும். சட்டசபை தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை, இயக்கத் தலைவருக்கு வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான இனிகோ இருதயராஜ், அரசு அதிகாரிகள் மீது பகிரங்கமாக புகார் தெரிவித்திருப்பதும், மரியாதை இல்லை என பேசி இருப்பதும், கூட்டணியில் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்ற கேள்வி, கிறிஸ்துவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- நமது நிருபர் -