தற்கொலை படையாக மாறி வந்தோம்: கார் குண்டு வழக்கில் கைதானவர் வாக்குமூலம்
தற்கொலை படையாக மாறி வந்தோம்: கார் குண்டு வழக்கில் கைதானவர் வாக்குமூலம்
ADDED : நவ 11, 2024 06:29 AM

சென்னை: ''கோவையில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தி பலியான ஜமேஷா முபின், எங்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்து, தற்கொலை படையாக மாற்றி வந்தார்' என, கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த, 2022 அக்டோபர், 23ல், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கார் குண்டு வெடிப்பு நடத்தி, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார்.
சிறையில் அடைப்பு
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஜமேஷா முபின் கூட்டாளிகள், 18 பேரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சமீபத்தில் கைதான கோவையை சேர்ந்த அபுஹனிபா, பவாஸ் ரஹ்மான், சரண் ஆகியோரை, ஆறு நாள் காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அபுஹனிபா அளித்துள்ள வாக்குமூலம்:
இலங்கையில், 2019ல், ஈஸ்டர் நாளில் சர்ச் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தி, 250க்கும் மேற்பட்டோரை கொன்ற, ஐ.எஸ்., பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் தலைமையில் செயல்பட்டு வந்தோம். ஐ.எஸ்., பயங்கரவாதி இயக்கத்தின், தமிழக பிரிவு நிர்வாகியாக ஜமேஷா முபின் செயல்பட்டார்.
சிறப்பு வகுப்பு
எங்களை சென்னைக்கு அழைத்து வந்து, சஹ்ரான் ஹாசிம் நடத்திய சிறப்பு வகுப்பில் பங்கேற்க செய்தார். ஈஸ்டர் குண்டு வெடிப்பில், சஹ்ரான் ஹாசிம் கொல்லப்பட்ட பின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் முக்கிய பொறுப்புக்கு வர ஜமேஷா முபின் ஆசைப்பட்டார்.
அதற்காக, ஹிந்து கோவில்களை தகர்க்க வேண்டும்; ஹிந்து தலைவர்களை கொல்ல வேண்டும். நீதிமன்றம், வெளிநாட்டு துாதரகங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என, பல்வேறு செயல் திட்டங்களை வகுத்திருந்தார்.
அதற்காக, எங்களை தற்கொலை படைகளாக மாற்றி வந்தார். கேரளா மற்றும் கோவை அரபு கல்லுாரியில், பயங்கரவாதம் குறித்து பயிற்சி அளித்தார். வெடிகுண்டு தயாரிப்பு குறித்தும் சொல்லி கொடுத்தார்.
இந்தியா முழுதும் முஸ்லிம் ஆட்சியை நிறுவ வேண்டும். அதற்கு உயிரையும் கொடுத்து போராட வேண்டும் என்பது தான், அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது. அதற்கான முதல் தாக்குதலாக கோட்டை ஈஸ்வரன் கோவிலை தகர்க்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.