1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துகளை இழந்துள்ளோம்: அண்ணாமலை
1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துகளை இழந்துள்ளோம்: அண்ணாமலை
ADDED : ஆக 29, 2025 09:47 PM

மேட்டுப்பாளையம்: ''1986ல் இருந்து தற்போது வரை 1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். திருச்செந்தூரில் கோவிலுக்கு கொடுத்த 16 ஆயிரம் மாடு காணவில்லை,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழாவில் தமிழக பா.ஜ.. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
2026 தேர்தலுக்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறோம். அடக்கு முறையை அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும் என மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். விநாயகர் சிலையை புதிதாக வைக்க முடியவில்லை. அரசின் அடக்க முறை தொடர்கிறது. விநாயகர் சிலையை உடைத்தவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் சாதி பார்ப்பது கிடையாது. பணக்காரன் பார்ப்பது கிடையாது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் விழாவாக உள்ளது.
வரும் செப்டம்பர் 10ல் கேரள மாநிலம் பம்பாவில் அனைத்துலக ஐயப்பன் சபரிமலை மாநாடு கம்யூனிஸ்ட் அரசு நடத்துகிறது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினர். அவரை -பாஜ கேரளாவில் கால் வைக்க விட மாட்டோம் என்றோம். உடனே ஒரு அரசு விழாவை ஏற்பாடு செய்து எனக்கு பதிலாக அமைச்சர் தியாகராஜன் கலந்து கொள்வார் என ஸ்டாலின் சொல்கிறார்.
உங்களுடன் ஸ்டாலின் என்பது ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது மனுக்களை வைகை ஆற்றில் போட்டு செல்கிறார்கள். 1986ல் இருந்து தற்போது வரை 1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். திருச்செந்தூரில் கோவிலுக்கு கொடுத்த 16 ஆயிரம் மாடு காணவில்லை. இரண்டு அங்கிளும் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இரண்டு அங்கிளும் ஒதுங்கி போங்க.
காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு உப்புமா போடுகிறார்கள் மாணவர்களை உப்புமா சாப்பிட வைத்தது தான் இந்த ஆட்சியின் சாதனை. 4.78 லட்சம் ஏக்கர் கோவில் சொத்தினால் வரக்கூடிய வருமானம் குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் ஹிந்து அறநிலைத்துறை இதுவரை சி.ஏ.ஜி.க்கு எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. ஆய்வு நடத்தப்படவில்லை. கோவில்களில் தங்கம் எவ்வுளவு உள்ளது போன்ற சொத்துக்களின் விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.