அன்னதானம், சிறப்பு பூஜைக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை சேகர்பாபு சொல்கிறார்
அன்னதானம், சிறப்பு பூஜைக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை சேகர்பாபு சொல்கிறார்
ADDED : ஜன 22, 2024 03:54 AM
சென்னை : அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிக்கை:
சேலத்தில் நடந்து வரும் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை திசை திருப்புவதற்காக, திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழக கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யவோ, அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கவோ எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.
உண்மைக்கு புறம்பான, உள்நோக்கம் உடைய பொய் செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்திற்கு உரியது.
இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சேகர்பாபுவுக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் நிர்மலா வெளியிட்ட பதிவு:
தடை விதிக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு மறுத்தாலும், அனுமதி மறுப்பை தரவுடன், ஆதாரத்துடன் மக்களே வெளியிட்டு வருகின்றனர். தனியார் கோவிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும் காவல் துறையினர் அனாவசியமாக தலையிடுகின்றனர்.
ஹிந்துக்களின் வழிபாட்டு முறையில், மீண்டும் மீண்டும் அரசு இடையூறு ஏற்படுத்துவதாக தமிழகம் முழுவதுமிருந்து வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை உங்களுடையது.
அறநிலையத்துறை அமைச்சராக, ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை முன்நின்று காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு.
தடை இல்லை என்றால், தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு உடனே அதிகாரிகளுக்கு ஆணையிடுங்கள்.