முதல்வர் பதவியை பறிக்கும் மசோதா தவறாக பயன்படாது என நம்புகிறோம்: நர லோகேஷ்
முதல்வர் பதவியை பறிக்கும் மசோதா தவறாக பயன்படாது என நம்புகிறோம்: நர லோகேஷ்
ADDED : செப் 08, 2025 08:07 PM

கோவை: ''30 நாட்கள் சிறை செல்லும் முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட வரைவு, தவறாக பயன்படுத்தப்படாது என நம்புகிறோம்; அதை வரவேற்கிறோம்'' என ஆந்திர அமைச்சர் நர லோகேஷ் கூறியுள்ளார்.
கோவையில் நடந்த, 'இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு - 2025' நிகழ்வில், ஆந்திர மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நர லோகேஷ் கூறியதாவது:துணை ஜனாதிபதி தேர்தலில், 'தெலுங்கு மகன்' என்ற பெருமித அரசியலுக்கு தெலுங்குதேசம் கட்சி பலியாகி விடாது. இந்தியாதான் முதலில். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளோம்.
ஒரு நல்ல தலைவரால், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். தேசத்தை வழிநடத்தும் திறமைமிக்க தலைவராக, பிரதமர் மோடியை பார்க்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த துணை ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கிறோம்.
சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் பதவி மீது, ஒரு கண் என்பதில்லை. அவரின் இரு கண்களும் ஆந்திர வளர்ச்சியில் உள்ளது. 2029 மட்டுமல்ல; அதற்குப் பிறகும் தேசிய ஜனநாயக கூட்டணியை தெலுங்குதேசம் ஆதரிக்கும். பிரதமர் மோடியின் தலைமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்களுக்கு கருத்து வேறுபாடு இருப்பின், தனிப்பட்ட முறையில் நிச்சயம் தெரிவிப்போம்.
இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறது. நாட்டை வழிநடத்தும் அரசியல்வாதிகள் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். பொருளாதாரம் அதிகரிக்கும்போது, ஊழல் அதிகரிக்கலாம். 30 நாட்கள் சிறை செல்லும் முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட வரைவு, தவறாக பயன்படுத்தப்படாது என நம்புகிறோம்; அதை வரவேற்கிறோம். ஒரு கல்வி அமைச்சராக, குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தும் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.