சிபிஐ என்றால் என்னவென எங்களுக்கு தெரியும்: சொல்கிறது திமுக
சிபிஐ என்றால் என்னவென எங்களுக்கு தெரியும்: சொல்கிறது திமுக
ADDED : ஜூன் 26, 2024 05:01 PM

சென்னை: ''இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் அன்றும், இன்றும் சிபிஐ விசாரணைக்கு நாங்கள் (திமுக) கோரவில்லை; சிபிஐ என்றால் என்னவென எங்களுக்கு தெரியும்'' என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீதிமன்றம் ஏதோ நிரபராதி என விடுதலை செய்துவிட்டதுபோல் இபிஎஸ் பேசியிருக்கிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் அவரது உறவினருக்கு கொடுத்த டெண்டரில் முறைகேடு என லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக சார்பில் புகாரளிக்கப்பட்டது. டெண்டர் வழக்கில் திமுக சார்பில் சிபிஐ விசாரணை கோரவில்லை; எஸ்.ஐ.டி விசாரணையை தான் கோரினோம்.
டெண்டர் வழக்கில் பல்வேறு சிக்கல் இருக்கின்ற காரணத்தினால் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் தான் உத்தரவிட்டது. அன்றும், இன்றும் நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. சிபிஐ என்றால் என்னவென எங்களுக்கு தெரியும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் விசாரணை துரிதமாக நடைபெறவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உண்மைக்கு புறம்பான தகவல்களை இபிஎஸ் கூறி வருகிறார். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.