‛டவுட்' தனபாலு: ‛அமைச்சர்களான நாங்கள், சொகுசாக வாழவில்லை'
‛டவுட்' தனபாலு: ‛அமைச்சர்களான நாங்கள், சொகுசாக வாழவில்லை'
ADDED : மார் 07, 2024 12:27 AM

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:
'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில் கலெக்டர், தாசில்தார், மக்களை தேடி வருகின்றனர். அமைச்சர்களான நாங்கள், சொகுசாக வாழவில்லை. அலுவலர்களை போலவே, நாங்களும் பணியாற்றி வருகிறோம்.
டவுட் தனபாலு:
அப்படியா...? ஆனா, அரசு ஊழியர்கள் 100 ரூபாய் லஞ்சம் வாங்கி பிடிபட்டாலே, மறுநாளே, 'சஸ்பெண்ட்' செய்யப்படுறாங்க... ஆனா, அமைச்சர்கள் அப்படியில்லையே... ஊழல் வழக்குல ஜெயிலுக்குள்ள போனாலும், இலாகா இல்லாத அமைச்சரா நீடிக்க முடியுதே... அதனால, உங்க கருத்தை யாரும் நம்ப மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
---
பா.ஜ.,வை சேர்ந்த, ம.பி., முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்:
கட்சியையே வழிநடத்த முடியாத ராகுலால், எப்படி நாட்டை வழிநடத்த முடியும். பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில், கோவில்களுக்கு சென்று போலி பக்தியை காட்டுவதால், ஒன்றும் நடந்து விடாது.
டவுட் தனபாலு:
கட்சி, நாடுன்னு ரெண்டையும் ஒரு சேர வழிநடத்துவது சிரமம் என்பதால் தானே, உங்க கட்சியின் தலைமை பதவியில நட்டாவும், பிரதமர் பதவியில மோடியும் இருக்காங்க... அந்த மாதிரி, சீக்கிரமே பிரதமர் ஆகப் போகும் தன்னால, கட்சியையும் வழிநடத்துவது கஷ்டம்னு ராகுல் நினைச்சுட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
---
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன்:
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரங்களை, வங்கிகள் தர இரண்டு நிமிடம் போதும். ஆனால், எஸ்.பி.ஐ., வங்கி, மூன்று அல்லது ஆறு மாதங்கள் அவகாசம் கேட்பது மிகவும் கேவலமானது.
டவுட் தனபாலு:
அதானே... எல்லாமே கணினிமயமாகிட்ட இந்த காலத்துல, விபரங்களை தர ஆறு மாதங்கள் அவகாசம் கேட்பது பல, 'டவுட்'களை எழுப்புதே... நன்கொடையாளர்களின் விபரங்களை வெளியிடுவதில், வங்கிக்கு விருப்பம் இல்லை என்பதும், 'டவுட்'டே இல்லாம தெரியுது!

