'மொழி மற்றும் கலையை காக்க வேண்டும்': முதல்வர் ஸ்டாலின்
'மொழி மற்றும் கலையை காக்க வேண்டும்': முதல்வர் ஸ்டாலின்
ADDED : நவ 25, 2024 12:05 AM

சென்னை: ''எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும், கலைக்கும் உண்டு; இந்த இரண்டையும் கண்கள் போல காக்க வேண்டும்'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முத்தமிழ் பேரவை பொன்விழா ஆண்டு, இசைவிழா, விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. பேரவை செயலர் அமிர்தம் வரவேற்றார்.
நடிகர் சத்யராஜுக்கு, கலைஞர் விருது; டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரத்திற்கு, ராஜரத்னா; ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு, இயல் செல்வம்; காயத்ரி கிரிஷ்சுக்கு, இசைச் செல்வம்; திருக்கடையூர் டி.எம்.எம்.உமாசங்கருக்கு, நாதஸ்வர செல்வம்; சுவாமிமலை குருநாதனுக்கு, தவில் செல்வம்; சோமசுந்தரத்துக்கு, கிராமிய கலைச்செல்வம்; பார்வதி ரவிக்கு, நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி பேசியதாவது:
முத்தமிழ் பேரவை கருணாநிதியால் துவக்கப்பட்டது. இந்த ஆண்டில் கலைஞர் விருது, சத்யராஜுக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி. அவர் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனத்தை பேசி நடித்தவர்.
கலையுலகில் சுயமரியாதை எண்ணத்தை வளர்த்தவர். திராவிட சிந்தனைகளை மறைக்காமல், துணிச்சலாக பேசுபவர்.
எம்.ஜி.ஆரிடம் நல்ல மரியாதை வைத்திருப்பவர். கருணாநிதி மீது இருக்கும் மரியாதையையும் மறைக்காதவர். இதுதான் அவருக்குரிய பெருமை. இயல், இசை, நாடகம் என மூன்று தமிழிலும், தமிழகத்தில் முத்திரை பதித்தவர் கருணாநிதி.
கருணாநிதி பேச்சில் இசைநயம் இருக்கும். அவர் எழுதுவதை வாசித்தால் இசை போல் இருக்கும். பொதுக்கூட்ட மேடையில், கருணாநிதி உணர்ச்சி பிழம்பாக பேசும் போது, நாடகத்தமிழை நேரில் பார்க்கலாம்.
இப்படி முத்தமிழாக வாழ்ந்தவர் கருணாநிதி. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம் முழக்கம். அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும். சிறக்க வேண்டும்.
ஜாதி, மதம் என்றும், அன்னிய மொழிகள் வாயிலாகவும், பல்வேறு பண்பாட்டு தாக்குதல் நடந்தாலும், எல்லாவற்றையும் தாங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும், கலைக்கும் உண்டு. இந்த இரண்டையும் கண்கள் போல் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.