ADDED : ஜன 02, 2024 11:57 PM
திருச்சி:''தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், தமிழகம் முக்கிய பங்காற்றி, சிகரம் தொட்ட மாநிலமாகி வருகிறது. திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களையும் விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்தியா முழுதிலும் இருந்து, ராமேஸ்வரத்திற்கு, மக்கள் ஆன்மிக பயணம் வருகின்றனர். எனவே, மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை, பிரதமர் நிறைவேற்ற வேண்டும்.
அதே போல், தொழில்துறை வளர்ச்சிக்கு, சென்னை -- பினாங்கு, சென்னை - டோக்கியோ நகரங்களுக்கு, நேரடி விமான போக்குவரத்து துவங்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில், இரண்டாம் விரிவாக்க திட்டத்துக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் விலக்கப்பட வேண்டும்.
மேலும், சிறு, குறு தொழில்களுக்கு, திருச்சி பெல் நிறுவனத்திடம் இருந்து, அதிக ஆர்டர்கள் கிடைக்க, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், கடும் மழை வெள்ளத்தால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதார கட்டமைப்பு சிதைந்துள்ளது. இதை தேசிய பேரிடாக அறிவித்து, உரிய நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. அந்த வகையில், தமிழக அரசின் கோரிக்கைக்கு பிரதமர் உதவ வேண்டும்.
இவ்வாறு, முதல்வர் பேசினார்.