கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நாங்களே நேரடியாக கள ஆய்வு செய்வோம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நாங்களே நேரடியாக கள ஆய்வு செய்வோம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ADDED : நவ 01, 2025 03:22 AM
மதுரை: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'நீதிமன்றத்தின் முழு நோக்கமும் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அதன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதே. யார் உண்மையை மாற்றி கூறினாலும் சரிபார்க்க நாங்களே நேரடியாக கள ஆய்விற்கு வருவோம்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்தது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இதற்கு சொந்தமாக கத்தப்பாறை, அதுார் பகுதியிலுள்ள 540 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2019 அக்., 23 ல் இரு நீதிபதிகள் அமர்வு,'ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் சொத்துக்களை மீட்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
இதை நிறைவேற்றாததால் அறநிலையத்துறை கமிஷனர், கரூர் கலெக்டர், கோயில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லை. சில அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்க நபர்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வருவாய்த்துறையிலுள்ள சில அதிகாரிகள், கோயில் அறங்காவலர்கள் உடந்தையுடன் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது.
நிலத்தை மீட்க அறநிலையத்துறை பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கோயில் நிலம் தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்களை இந்நீதிமன்றத்தில் கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற தடை உத்தரவு எதுவும் இல்லாதபட்சத்தில் இக்கோயில் நிலத்திலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்நடவடிக்கைக்கு உதவ, பாதுகாப்பு அளிக்க போலீஸ் தனிப்படையை எஸ்.பி., அமைக்க வேண்டும். அறநிலையத்துறை கமிஷனர், கரூர் கலெக்டர், எஸ்.பி., கோயில் செயல் அலுவலர் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.
நேற்று நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, கோயில் செயல் அலுவலர் சுகுணா ஆஜராயினர். வருவாய்த்துறை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன்,''காலியாக இருந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் உள்ள நிலம் தொடர்பாக சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனி நபர் பெயர்களில் வழங்கிய பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
நீதிபதிகள்: ஆவணங்கள் அடிப்படையில் மனுதாரர் கள ஆய்வு செய்யலாம். அதிகாரிகள் உள்ளிட்ட வேறு யாரும் ஆக்கிரமித்துள்ளனரா, பினாமி பெயரில் அச்சொத்து உள்ளதா என ஆய்வு செய்யலாம். ஒட்டுமொத்த அரசுத்துறையும் ஒத்துழைக்க வேண்டும். அச்சுறுத்தல் வந்தால் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கலாம். அதனடிப்படையில் மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மனுதாரர் யாரையும் 'பிளாக்மெயில்' செய்யக்கூடாது. அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிமாக உள்ள நேரத்தில் அவர்களை மனுதாரர் தொந்தரவு செய்யக்கூடாது.
ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நீதிமன்றத்தின் முழு நோக்கமும் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அதன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதே. அதற்காக அரசுக்கு இறுதி வாய்ப்பு வழங்குகிறோம். யார் உண்மையை மாற்றி கூறினாலும், நிலத்தை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தவறினாலும், சரிபார்க்க நாங்களே நேரடியாக கள ஆய்விற்கு வருவோம். யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது. முயற்சித்தால் நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றனர்.
பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வருவாய்த்துறை ஆவணங்கள், அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
அரசின் நடவடிக்கையில் முன்னேற்றம் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நிலுவையிலுள்ள ரிட் மற்றும் ரிட் மேல்முறையீட்டு மனுக்களை இவ்வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். வரும் காலங்களில் இவ்வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விசாரணை நவ., 7 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

