தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் ஆட்சியை நிறுவுவோம்: இபிஎஸ்
தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் ஆட்சியை நிறுவுவோம்: இபிஎஸ்
ADDED : செப் 15, 2026 09:54 AM

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
அண்ணாதுரை 117வது பிறந்த நாள் விழா இன்று (செப் 15). இதையொட்டி இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் அண்ணாதுரை.
அதிகாரத்தை விட கொள்கையையும், பதவியை விட மக்களையும், தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாதுரையின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் அண்ணாதுரையை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன். மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
திமுக தலைவர், ஸ்டாலின்
தமிழகத்தின் அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாதுரைக்கு புகழ் வணக்கம்; தலைநிமிர்ந்த தமிழர். தலைநிமிர்ந்த தமிழ்நாடு என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர். அண்ணாதுரை சுயமரியாதையில் சமூகநீதியில், மாநில உரிமையில், தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்.
