கோவில் நகரமான மதுரையை தொழில் நகரமாக... மாற்றுவோம்! : முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
கோவில் நகரமான மதுரையை தொழில் நகரமாக... மாற்றுவோம்! : முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
UPDATED : டிச 08, 2025 12:00 AM
ADDED : டிச 07, 2025 11:52 PM

மதுரை: ''மதுரையை, 'துாங்கா நகரம்' என அழைப்பதை விட, விழிப்புடன் இருக்கும் நகரம் எனலாம். கோவில் நகரமான மதுரை, தொழில் நகரமாகவும் புகழ் பெற வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கான எல்லா தகுதியும் மதுரைக்கு உள்ளது. எனவே, மதுரையை தொழில் நகரமாக மாற்றுவோம்,'' என, நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசினார். மாநாட்டில், 36,660 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மதுரை, ரிங் ரோடு ஐடா ஸ்கட்டர் மண்டபத்தில், 'தமிழகம் வளர்கிறது' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது. மாநில தொழில் துறை அமைச்சர் ராஜா வரவேற்றார்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், மாநாட்டில், 36,660 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றின் மூலம், 56,766 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மேலுாரில், 278 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் மதுரையை கட்டமைக்கும், 'மாஸ்டர் பிளான் - 2044' மலரை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அழைப்பு
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் நலிவடைந்த தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் அவசியம், அவசரம் அறிந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பானில் உள்ள முதலீட்டாளர்களுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற நிலையை உருவாக்கும் வகையில், முக்கிய நகரங்களில், 'தமிழ்நாடு ரைசிங்' என்ற மாநாட்டை நடத்தி வருகிறோம்.
துாத்துக்குடி, ஓசூர், கோவையில் நடந்ததை அடுத்து, மதுரையில் இன்று மாநாடு நடக்கிறது. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 11 லட்சத்து 83,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து, 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 80 சதவீதத்திற்கும் மேலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதல்வர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். முதலீடு செய்வதற்கு முன், ஒரு மாநிலத்தின் கொள்கை, மனித வளம், உள்கட்டமைப்பு, சட்டம் - ஒழுங்கு, நிர்வாகத் திறன் அனைத்தையும் ஆய்வு செய்து, வணிகத்திற்கு பொருத்தமான இடத்தையே தேர்வு செய்வர். அவ்வகையில் முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழகம் உள்ளது.
மதுரையை, 'துாங்கா நகரம்' என அழைப்பதை விட, விழிப்புடன் இருக்கும் நகரம் எனலாம். இங்கு, மல்லிகை மணக்கும்; நள்ளிரவில் இட்லி ஆவி பறக்கும்; சுங்குடி சேலை, கைவினை பொருட்கள் அனைவரையும் ஈர்க்கும். கீழடியில் கிடைத்த சான்றுகள், நாட்டின் வரலாற்றையே மாற்றி எழுத வைத்திருக்கின்றன.
தகுதி உள்ளது
கோவில் நகரம் எனும் மதுரை, தொழில் நகரமாகவும் புகழ் பெற வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கான எல்லா தகுதியும் மதுரைக்கு உள்ளது. எனவே, மதுரையை தொழில் நகரமாக மாற்றுவோம்.
இங்கு, சர்வதேச விமான நிலையம், அருகில் துாத்துக்குடி துறைமுகம், முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை வசதிகள் என சிறப்பான உட்கட்டமைப்புகள் உள்ளன.
இங்குள்ள உயர் கல்வி நிறுவனங்கள், திறன் மிகுந்த மனித வளத்தை கொண்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களால் பெரிய தொழிற்சாலைகளும் பயன்படுகின்றன.
மத்திய அரசுடன் இணைந்து விருதுநகரில், 1,893 கோடி ரூபாயில், 1,052 ஏக்கரில் பி.எம்.மித்ரா எனும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா உருவாகி வருகிறது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும்.
மாநிலத்தின் ஜவுளி உற்பத்தி நவீனமாக்கப்படும். தேனியில், 424 ஏக்கரில் பொறியியல் பூங்கா, மெகா உணவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், இலுப்பைக்குடியில், 108 ஏக்கரில் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மதுரையில், 314 கோடி ரூபாயில் டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது.
சிவகங்கையில் டைடல் நியோ பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் டைடல் நியோ பூங்காக்கள் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தற்போது, துாத்துக்குடியில் கப்பல் கட்ட, 'ஹூண்டாய்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சிறிய அளவிலான 'சிப்' முதல், பெரிய அளவிலான 'ஷிப்' வரை அனைத்து துறைகளிலும் தமிழகம் தன்னம்பிக்கையுடன் தன்னிறைவு பெற்று, தலைநிமிர்ந்து நிற்கிறது.
ஆராய்ச்சி பூங்கா
விளையாட்டு பொம்மைகள் உற்பத்தியில் தமிழகத்தை முன்னணி மையமாக உயர்த்தவும், பாரம்பரிய பொம்மை தயாரிப்பு கலைஞர்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு பொம்மை உற்பத்தி கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, தொழில் சார்ந்த பொருளாதாரத்தை பெருக்க, தமிழ்நாடு பல்கலை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
அமைச்சர்கள் வேலு, நேரு, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன், மூர்த்தி, தியாகராஜன், எம்.பி., வெங்கடேசன், தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் ஹரி தியாகராஜன், எம்.எஸ்.எம்.இ., கூடுதல் தலைமை செயலர் அதுல் ஆனந்த், வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, தொழில் வணிக கமிஷனர் நிர்மல்ராஜ், கலெக்டர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

