200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ADDED : டிச 20, 2024 01:24 PM

கோவை: வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு உள்ளது. ஆனால் ஈரோடு மாவட்ட கள ஆய்வு அடிப்படையில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என உணர்ந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சமீபத்தில் காலமான கோவை முன்னாள் எம்.பி., மோகன் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வு நடத்தினேன். கள ஆய்வை பொறுத்தவரை இன்னும் வேகமாக பணியாற்றுவோம் என உறுதிமொழி கொடுத்து இருக்கிறார்கள். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 200 என்ற இலக்கை வைத்து இருக்கிறோம்.
ஈரோடு கள ஆய்வில், 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்று உணர்ந்தேன். பா.ஜ., எம்.பி.,க்களின் குற்றச்சாட்டை ராகுல் சட்டப்படி சந்திப்பார். ஈரோடு கிழக்கு தொகுதி, தி.மு.க., கூட்டணி வசமாகும். ஏற்கனவே இண்டியா கூட்டணியில் தி.மு.க., அங்கம் வகிக்கிறது. எனவே இண்டியா கூட்டணி வசமாகும். போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கலந்து ஆலோசித்து அறிவிப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை படு குழிக்கு தள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நல்லா பாக்குறேன்' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.