ADDED : அக் 04, 2024 06:43 AM

சென்னை: வடக்கு வங்கக்கடல் பகுதியில், புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது.
இந்திய வானிலை துறை அறிக்கை:
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. இந்த மாநிலங்களில் அடுத்த சில நாட்களில், முழுமையாக விலகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
தென்கிழக்கு வங்கதேசம், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளி மண்டல சுழற்சி காணப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக, வடக்கு வங்கக்கடலில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருப்பத்துாரில் 9 செ.மீ., வரை மழை பதிவாகி உள்ளது.
குமரிக்கடல் உள்ளிட்ட பகுதியில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, தற்போது லட்சத்தீவு பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு, கனமழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.