காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது: வானிலை மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது: வானிலை மையம்
UPDATED : நவ 28, 2024 08:30 PM
ADDED : நவ 28, 2024 04:20 PM

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது; வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது. தற்போது, சென்னைக்கு தென் கிழக்கே 470 கி.மீ., தொலைவில் நிலை கொண்டு உள்ளது. நாளை மாலைக்குள் படிப்படியாக வலுவை இழந்துவிடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
முன்னதாக, சென்னையில் நிருபர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது; இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து 30ம் தேதி காலை காரைக்கால் மகாபலிபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரை கடக்கக்கூடும்.
அப்போது பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்திலும் அவ்வப்போது 70 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
வடகிழக்கு பருவமழையானது தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1 முதல் இன்று வரை பதிவான மழை அளவு 350 மி.மீ., இயல்பான அளவு 346 மி. மீ., இது இயல்பை ஒட்டிய அளவு.
எதிர்பார்த்த அளவு மேகக்கூட்டங்கள் சேராததால் மழை பெய்யவில்லை. தற்காலிகமாக மாறும் புயல் வலுப்பெற வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.