ADDED : ஆக 09, 2024 06:43 AM

சென்னை: 'பருவக்காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகத்தில் பெய்து வரும் மாலை மற்றும் இரவு நேர மழை, மேலும் சில நாட்கள் தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தற்போது பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடனான மிதமான மழை, அடுத்த சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12ல், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, தன்னார்வ வானிலை ஆய்வாளரின், 'வெதர்மேன்' இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.