செப்., 3 வரை ஒரு சில இடங்களில் காற்று, மின்னல், லேசான மழை
செப்., 3 வரை ஒரு சில இடங்களில் காற்று, மின்னல், லேசான மழை
ADDED : ஆக 29, 2024 06:53 AM

சென்னை : 'வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது. எனினும் சில மாவட்டங்களில் மிதமான மழை தொடர்கிறது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் தெற்கு பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து, 5.8 கி.மீ., உயரத்தில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று, புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளன. இது, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இந்த பின்னணியில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், மணிக்கு 40 கி.மீ., வேகத்தில், பலத்த தரை காற்று, இடி மின்னலுடன், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக., 31 முதல் செப்., 3 வரை, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் தமிழக கடலோரம், வடக்கு ஆந்திர கடலோரம், தெற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு, 45 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று, மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.