ADDED : அக் 24, 2025 02:06 AM

சென்னை: தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி வெளியிட்ட அறிக்கை:
மாடுகள் வளர்க்கும் ஏழை, எளியவர்களிடம் இருந்து, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் கொள்முதல் செய்து, ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது.
மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவது, தீவன செலவு அதிகரிப்பு, கட்டுப்படியாகாத விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை.
எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று, மாடுகள் வளர்க்கும் ஏழை எளிய மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், மாடுகள் வளர்க்கும் பொருளாதாரத்தில் மிக மிக அடித்தட்டில் உள்ள ஏழை மக்களின் குரலை, அரசு கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது.
தொடர் நஷ்டத்தை தாங்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலை விற்க தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 45 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாமல் இருக்கின்றன.
இந்நிலை தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் முடங்கும் நிலை ஏற்படும். அப்படி நடந்தால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து, அந்நிறுவனமும் செயல்பட முடியாத நிலை ஏற்படும். இது தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.
ஆவின் நிறுவனம் தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்தி விடும்.
இதனால், ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். பால் என்பது மிக மிக அத்தியாவசியமான பொருள். பால் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது சமுதாயத்தில் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். எனவே, இப்பிரச்னைக்கு ஆரம்பத்திலேயே தீர்வு காண வேண்டும்.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் தான், ஆவின் நிறுவனத்தின் உயிர்நாடி என்பதை தி.மு.க., அரசு உணர வேண்டும். இப்பிரச்னையில், முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

