ADDED : அக் 28, 2024 02:35 PM

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொள்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன; தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று(அக்.,27) தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடந்தது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. மாநாட்டில் பேசிய விஜய், ''நம்பி வருவோரை அரவணைப்பது தான் எங்களின் பழக்கம்.
எங்களை நம்பி, 2026 சட்டசபை தேர்தலில் களம் காண வருவோருக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு வழங்குவோம்' என தெளிவாக கூறிவிட்டார். தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொள்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது.
காங்., வரவேற்பு
'ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது' என சமூகவலைதளத்தில் காங்., எம்.பி., மாணிக்கம் தாக்கூர் பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க., எதிர்ப்பு
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: 'விஜய் மாநாட்டால் அ.தி.முக.,வுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அ.தி.மு.க.,வின் கொள்கையும் தான்.
தி.மு.க., ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் கூடிய கூட்டமாக விஜய் மாநாடு இருந்தது. தமிழகம் தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளதை மாநாடு காட்டியது'. இவ்வாறு அவர் கூறினார்.
சபாநாயகர் அப்பாவு
' ரஜினி அரசியலுக்கு வராததால் பா.ஜ.,தான் விஜய்யை இறக்கியிருக்கிறதோ என சந்தேகம் எழுகிறது. வருமான வரி சோதனையில் சிக்கிய போது, விஜய்க்கு ஆதரவாக தி.மு.க.,தான் குரல் கொடுத்தது' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டத்துறை அமைச்சர், ரகுபதி
விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை; பா.ஜ.,வின் C டீம்: த.வெ.க., மாநாடு, பிரம்மாண்ட சினிமா மாநாடு. அ.தி.மு.க., தொண்டர்களை ஈர்க்கவே அக்கட்சி குறித்து பேசாமல் தி.மு.க., குறித்து விஜய் பேசியுள்ளார். எங்கள் கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பதால் கவர்னரைப் பற்றி பேசியுள்ளார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
ராம.ஸ்ரீனிவாசன், பா.ஜ.,
விஜயின் மாநாடு வெற்றி தான். ஆனால் அரசியல் வெற்றி அடையாது. ஒருநாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.