ADDED : ஆக 24, 2011 10:44 AM
கோவை: 'பெற்றோர் தரும் சுதந்திரத்தை, பொறுப்போடு மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் முன்னேற வேண்டும்,'' என, எஸ்.என்.எஸ்., கல்லூரி செயலாளர் நளின் விமல்குமார் பேசினார்.
கோவை, வளியாம்பாளையத்தில் எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர்கள் சுப்ரமணியம், ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர். விழாவில், கல்லூரி செயலாளர் ஜனன்யா வரவேற்றார். மாணவர்கள் கல்லூரியில் நடந்து கொள்ளும் விதம் குறித்து, கல்லூரி முதல்வர் சண்முகநாதன் பேசினார். விழாவில், சிறப்பு விருந்தினராக விஜயலட்சுமி அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசாமி பங்கேற்றார்.
கல்லூரி நிர்வாக இயக்குனர் நளின் விமல்குமார் பேசியதாவது: பெற்றோர், மாணவ, மாணவியரை கல்லூரியில் சேர்ப்பதோடு விட்டு விடாமல், தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம், சரியான பாதையில் செல்ல பயன்படுத்துகின்றனரா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நவீன யுகத்தில் உள்ள கருவிகளை முழுமையாகவும் சரியாகவும் திட்டமிட்டு பயன்படுத்தினால், எதிர்காலத்தில் எதையும் பெற முடியும். க<ல்லூரியில் படிப்பதோடு மட்டுமின்றி, வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் எங்கு பணியாற்றினாலும், இந்த கல்லூரியில் கற்றுக் கொண்ட ஒழுக்கம், கல்வி, கலாச்சாரம் போன்றவைகள் நிலைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்களின் செயல்களையும் பொறுப்போடு கவனித்து சீர்படுத்தும் ஆசிரியர்கள் இக்கல்லூரியில் உள்ளனர். பெற்றோர் தரும் சுதந்திரத்தை, பொறுப்போடு மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு, கல்லூரி நிர்வாக இயக்குனர் நளின் விமல்குமார் பேசினார்.