கட்டுமான தொழிலாளர் நலவாரிய டெண்டரில் முறைகேடு: நலவாரிய உறுப்பினர் குற்றச்சாட்டு
கட்டுமான தொழிலாளர் நலவாரிய டெண்டரில் முறைகேடு: நலவாரிய உறுப்பினர் குற்றச்சாட்டு
UPDATED : அக் 10, 2026 10:23 PM
ADDED : அக் 10, 2026 10:19 PM
நாமக்கல்: ‘‘தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் விடப்படும் டெண்டர்களில், முறைகேடுகள் நடந்துள்ளது,’’ என, தொ.மு.ச., பேரவை செயலரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினருமான தமிழ்ச்செல்வி குற்றம்சாட்டினார்.
நாமக்கல்லில் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில், கட்டுமான பணிகளின் மீது, ஒரு சதவீதம் செஸ் வரியாக வசூலிக்கப்படும் தொகை உள்ளிட்ட நிதி ஆதாரங்களின் மூலம், 7,000 கோடி ரூபாய் நிதி உள்ளது. இந்த நிதி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், வாரியம் சார்பில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களுக்கான டெண்டர்களில், முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
கட்டுமான தொழிலாளர்களுக்கான சான்றிதழ்களை இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்ற நிலையில், தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கி, ‘ஸ்மார்ட்’ அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.
ஆனால், அச்சிடப்பட்ட அட்டைகள் தொழிலாளர்களுக்கு முறையாக சென்றடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், கட்டுமான தொழிலாளர்களுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான நடைமுறைகளில் உதவுவதற்காக, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சில இடங்களில், கழிப்பறை வசதி கூட ஏற்படுத்தப்படவில்லை. ஒரு மையத்துக்கு, 40 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான டெண்டர் மற்றும் செலவினங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்துள்ளேன். தமிழக கவர்னரிடமும் புகாரளித்துள்ளேன். புகார்படி, என்னிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும், பிற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை செயலராக பணியாற்றி வரும் வீரராகவ ராவ், பணியிட மாற்றம் செய்யாமல், 2024 முதல் தொடர்வதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
