திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.4 கோடியாம்!
திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.4 கோடியாம்!
ADDED : பிப் 13, 2025 02:32 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காரில் கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்புள்ள திமிங்கலம் உமிழ் நீரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரத்தில் திமிங்கல உமிழ்நீர் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட திமிங்கலம் உமிழ் நீர் நான்கு கிலோவை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. ரூ.4 கோடி மதிப்புள்ள திமிங்கலம் உமிழ் நீரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, மதுரை சிங்கராயன் காலனியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜன், தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள ரங்கநாதபுரம் விஜயேந்திரன் மகன் ஜெயக்குமார், சாத்தான்குளம் பள்ளிவாசல் தெரு முகைதீன் மகன் சாகுல் ஹமீது, ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பூபதி மகன் ஜெகதீஷ் சந்திர போஸ், ராமநாதபுரம் எம்.எஸ்.கே., நகரைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜலிங்கம், பரமக்குடி வீரவனூரை சேர்ந்த நாகரத்தினம் மகன் சுரேஷ்பாபு ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை ராமநாதபுரம் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தல் ஏன்?
திமிங்கலத்தின் உமிழ் நீரான ஆம்பர் கிரீஸ், உயர்ரக வாசனை திரவியங்கள் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்களில், வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரொம்ப அதிகம். இதனால், 'கடல் தங்கம்' எனவும் அழைக்கப்படுகிறது.