ஆமைகள் இறப்புக்கு காரணமான படகுகள் மீது என்ன நடவடிக்கை? அரசுக்கு தீர்ப்பாயம் கேள்வி
ஆமைகள் இறப்புக்கு காரணமான படகுகள் மீது என்ன நடவடிக்கை? அரசுக்கு தீர்ப்பாயம் கேள்வி
ADDED : ஜன 28, 2025 10:00 PM
சென்னை:'ஆமைகள் இறப்புக்கு காரணமான, இழுவை மீன்பிடி வலைகள் பயன்படுத்திய, எத்தனை விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?' என, தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை கடலோரங்களில், 'ஆலிவ் ரிட்லி' எனப்படும், அரிய வகை கடல் ஆமை உள்ளிட்ட நான்கு வகை கடல் ஆமைகள், நுாற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
இதுதொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'கடல் ஆமைகள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்குவதற்கான காரணம் கண்டறியப்பட்டதா; ஆமைகள் உயிரிழப்பை தடுக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், ''கடல் ஆமைகள் இறப்பை தடுக்க, சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது,'' என்று பதிலளித்தார்.
அதை தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'கடல் ஆமைகள் உயிரிழப்புக்கு காரணமான இழுவை மடிவலைகளை பயன்படுத்திய பெரிய விசை படகுகளை, அரசு அடையாளம் கண்டுள்ளதா; அப்படி கண்டறியப்பட்டிருந்தால், எத்தனை விசை படகுகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது' என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், 'வழிமுறைகளை கடைப்பிடிக்காத மீன்பிடி கப்பல்கள், படகுகளுக்கு அரசு வழங்கும் டீசல் மானியம், பிற படிகள், நலத்திட்டங்கள் வழங்குவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது.
'இது தொடர்பாக, வரும் 31ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றார்.