'ஆதவ் அர்ஜுனா பேசியது சரிதான்' திருமாவளவன் முடித்து வைத்த பஞ்சாயத்து
'ஆதவ் அர்ஜுனா பேசியது சரிதான்' திருமாவளவன் முடித்து வைத்த பஞ்சாயத்து
ADDED : செப் 28, 2024 02:35 AM
அமைச்சர் உதயநிதியை விமர்சித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., வலியுறுத்தியுள்ள நிலையில், 'அவர் பேசியது சரியே' என கூறியுள்ளார் வி.சி., தலைவர் திருமாவளவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அளித்த பேட்டியில், 'நான்கு ஆண்டுகளுக்கு முன், சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா' என்றார்.
'ஆதவ் கருத்து எங்களுக்கு ஏற்புடையதல்ல; உதயநிதியை விமர்சித்தவர் மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா வலியுறுத்தினார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது: எல்லா கட்சியிலும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகளை சேர்த்துக் கொள்ளலாமா என ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களது மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் கேட்கின்றனர்.
அதில், சேர்க்க வேண்டாம் என பெரும்பாலானவர்கள் சொல்கின்றனர்.
கடைசியில், தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தான் முடிவெடுக்கின்றனர்.
அதேபோலவே வி.சி., கட்சியிலும் அதன் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்து பேசுகின்றனர்.
யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் தங்களுடைய கருத்தாக வைக்கலாம்; பேசலாம். ஒவ்வொரு கருத்தையும் தலைமையும் உள்வாங்கலாம். ஆனால், இறுதியில் தலைமை எடுப்பது தான் முடிவாக இருக்கும்.
வி.சி.,க்களை பொறுத்தவரை, கட்சியின் துணை பொதுச் செயலராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் எதிர்கால நலனுக்காக என்ன பேசினாலும் அது சரிதான்.
அதேபோல, கட்சியில் சீனியர்களாக இருக்கும் எம்.பி.,யாகவும், கட்சியின் பொதுச்செயலராகவும் இருக்கும் ரவிகுமார், துணை பொதுச்செயலர் வன்னியரசு ஆகியோர் கட்சி நலனுடன் சேர்த்து கூட்டணி நலனுக்காகவும் பேசியதும் சரியானது தான்.
அதற்காக, கட்சியில் யாரையும் கருத்து சொல்லாதீர்கள் என தடுக்க முடியாது; தடுக்கவும் தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -