தாமிரபரணி ஆற்றை சீரமைக்க என்ன செய்யலாம்?: பரிந்துரை வழங்க கமிஷனரை நியமித்து ஐகோர்ட் உத்தரவு
தாமிரபரணி ஆற்றை சீரமைக்க என்ன செய்யலாம்?: பரிந்துரை வழங்க கமிஷனரை நியமித்து ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 04, 2026 12:54 AM

மதுரை: திருநெல்வேலி, தாமிரபரணி ஆறு, கழிவுநீர் கலப்பால் மாசடைவதை தடுக்க, அதன் நிலைமையை ஆய்வு செய்து, சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க, நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்கை கமிஷனராக நியமித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுார் காமராஜ், 2018ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.
ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். ஆற்றை துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமர்வு, 2024 மார்ச் 11ல் பிறப்பித்த உத்தரவு:
திருநெல்வேலி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர், தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், தாமிரபரணி மாசுபடுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் வலியுறுத்த வேண்டும். ஆற்றில் இனிமேல் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
இதை நிறைவேற்றாததால், அப்போதைய திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் ரூபேஷ் குமார், பொதுப்பணித்துறை தாமிரபரணி பாசன கோட்ட தலைமை பொறியாளர் மதன சுதாகர், அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி, அம்பாசமுத்திரம் நகராட்சி கமிஷனர் செல்வராஜ், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் ராமதிலகம் உட்பட, 12 அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, காமராஜ் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தாமிரபரணி மாசுபடுவதை தடுக்க நாங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசை ஏற்கனவே இதில் ஈடுபடுத்தியும் நிலைமை சரியாகவில்லை.
ஓராண்டிற்கு மேல் நடந்த பணி திருப்தி அளிக்கவில்லை. பயனுள்ள தீர்வுகளை முன்வைக்கவில்லை. தாமிரபரணியின் நிலைமையை ஆய்வு செய்து, சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கை கமிஷனராக நியமிக்கிறோம்.
அவர், ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகள், ஆறுகளை மீட்டெடுத்துஉள்ளார். அவர் 'மகசேசே' விருது பெற்றவர். அவரது அனுபவத்தின் மூலம், செயல்படுத்தக்கூடிய திட்டத்தை முன்வைக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அவரது ஆலோசனைகள் தீவிரமானதாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஆறு அதன் இயல்பான துாய்மையை மீண்டும் பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
திண்டுக்கல்லில் பாராட்டுக்குரிய வகையில் களப்பணியாற்றிய பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியை ராஜேந்திர சிங் பெற்றுக் கொள்ளலாம்.
ராஜேந்திர சிங்கிற்கு, 2 லட்சம் ரூபாய், பாலாஜி ரங்கராமானுஜத்திற்கு, 50,000 ரூபாய் கவுரவ சம்பளம் வழங்கப்படும். ராஜேந்திர சிங்கிற்கு மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

