ADDED : நவ 09, 2024 07:00 PM

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கொசப்பூர் குளம், 2022ல் துார் எடுக்கப்பட்ட நிலையில், 2023ம் ஆண்டிலும் துார் எடுக்க டெண்டர் வெளியிட்டது ஏன் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 2, வார்டு எண் 19க்கு உட்பட்டது கொசப்பூர் குளம். இந்த குளத்தை, இ.எப்.ஐ., மற்றும் கோத்ரெஜ் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி 2022ல் துார் எடுத்தது. கரைகள் உயர்த்தப்பட்டு வேலியும் அமைக்கப்பட்டது.
தங்கள் பங்களிப்புடன் குளம் துார் எடுக்கப்பட்டதை, குறிப்பிட்ட அந்த இரு நிறுவனங்களும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளன.
ஆனால், மீண்டும் 2023ல் அதே குளத்தை 2 கோடி ரூபாய்க்கு துார் எடுக்க மாநகராட்சி சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி வெளியிட்டு 17 மாதங்கள் கடந்தும் அங்கு எந்த பணியும் நடக்கவில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே முடிந்த வேலையை கணக்கு காட்டி, 2 கோடி ரூபாய் கொள்ளையடிக்க திட்டம் போடப்பட்டதா என்றும், அந்த அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேபோல, மொத்தம் 14 குளங்களை துார் எடுக்க 20 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், அறப்போர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.