கூட்டுறவு சங்க பயிர் கடனுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
கூட்டுறவு சங்க பயிர் கடனுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
ADDED : டிச 09, 2025 05:08 AM

சென்னை: 'தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க இணையதளத்தில், பயிர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, உறுப்பினர் அட்டை எண், ஆதார் எண், நிலத்தின் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை, விவசாயிகள் வைத்திருக்க வேண்டும்' என, கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த அன்றே, விவசாயிகள் வங்கி கணக்கில் கடன் தொகை செலுத்தும் திட்டத்தை, தர்மபுரி மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆகஸ்டில் துவக்கி வைத்தார்.
இத்திட்டம், அடுத்த இரு வாரங்களில் மாநிலம் முழுதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இணையதளத்தில் பயிர் கடனுக்கு விண்ணப்பிக்க, 'இ - சேவை' மையங்களை அணுகலாம். விண்ணப்பதாரரின் உறுப்பினர் அட்டை அல்லது உறுப்பினர் எண் அல்லது மத்திய வங்கி கே.சி.சி., சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பயிர் செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் பட்டா, சிட்டா, குத்தகை நிலமாக இருப்பின் அதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட சான்றுகள் அவசியம்.
இ - சேவை மைய தளத்தில், கூட்டுறவு துறையை தேர்வு செய்து, உறுப்பினர் எண்ணை பதிவு செய்தால், விபரங்களை காணலாம். ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து, கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

