கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலை ஸ்டாலினுக்கு ஏற்படும்: தம்பிதுரை
கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலை ஸ்டாலினுக்கு ஏற்படும்: தம்பிதுரை
ADDED : ஏப் 15, 2025 01:08 AM

ஓசூர் : “டில்லியில் ஊழலுக்காக சிறைபட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலை முதல்வர் ஸ்டாலினுக்கும் வரும்,” என, அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் தம்பிதுரை கூறினார்.
ஓசூரில், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இருந்து தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும். அதற்காக, கடந்த 1998ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்ன முடிவு எடுத்தாரோ, அதே முடிவைத்தான் அ.தி.மு.க., பொதுச்செயலர் இன்று எடுத்துள்ளார்.
தமிழக மறுமலர்ச்சிக்காக நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால் மட்டுமே முடியும். அந்த வகையில், தமிழகத்துக்கான பொருத்தமான கூட்டணியாக அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைந்துள்ளது.
கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதை, நாங்கள் தீர்த்து கொள்வோம்.
தி.மு.க.,வின் குடும்ப அரசியல் ஒழிக்கப்பட வேண்டும். அதை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி செய்யும்.
டாஸ்மாக்கில், 39,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். இதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை.
டாஸ்மாக் ஊழல் பிரச்னையில், முதல்வர் வரை ஊழல் நீண்டிருப்பதாக சொல்லப்படுவதால், அமலாக்கத்துறை முறையாக நடவடிக்கை எடுத்தால், ஸ்டாலினும் ஜெயிலுக்குப் போகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
டில்லியில், ஊழலுக்காக சிறைபட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்ன நிலை ஏற்பட்டதோ, அதேநிலை முதல்வர் ஸ்டாலினுக்கும் வரும்.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.