நீட் தேர்வு ரத்து என்னாச்சு?: உதயநிதியிடம் கேளுங்கள் என்கிறார் அன்புமணி
நீட் தேர்வு ரத்து என்னாச்சு?: உதயநிதியிடம் கேளுங்கள் என்கிறார் அன்புமணி
ADDED : ஜூலை 08, 2024 05:19 PM

விழுப்புரம்: நீட் தேர்வு ரத்து குறித்து, பிரசாரத்திற்கு வந்துள்ள உதயநிதியிடம் கேளுங்கள் என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து, அன்புமணி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இது முக்கியமான தேர்தல். சமூக நீதிக்கான தேர்தல். மாம்பழத்திற்கு ஓட்டளித்தால், நல்ல எதிர்காலம் உண்டு. எனது பிரசாரத்தில் பங்கேற்காத வகையில் மக்களை அடைத்து வைக்கிறார்கள். மக்களை அடைத்து வைக்கும் கலாசாரத்தை கண்டுபிடித்தவர் செந்தில் பாலாஜி.
பா.ம.க.,வுக்கு ஓட்டளியுங்கள்!
திமுக கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். ரத்து செய்தார்களா?. நீட் தேர்வு ரத்து குறித்து, பிரசாரத்திற்கு வந்துள்ள உதயநிதியிடம் கேளுங்கள். தி.மு.க., அரசிடம் எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சாவை ஒழிக்க பா.ம.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். பா.ம.க., வேட்பாளரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.