டிரம்ப் விதித்த வரி செல்லாது: அமெரிக்க நீதிமன்றம் சொன்னது என்ன?
டிரம்ப் விதித்த வரி செல்லாது: அமெரிக்க நீதிமன்றம் சொன்னது என்ன?
ADDED : ஆக 30, 2025 01:07 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி செல்லாது. சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று தான் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தது. கனடா, பிரேசில் உட்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து அதிபர் டிரம்ப் அதிரடி காட்டினார்.
அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 50 சதவீதம் வரை பரஸ்பர வரிகள் விதிக்கப்பட்டது. மற்ற நாடுகளுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையும் வரிகள் விதிக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் அளித்து அதிபர் டிரம்ப் பரஸ்பர வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். அப்போது ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வரிகளை குறைத்து கொண்டன.
டிரம்பின் கோபத்திற்கு ஆளான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உதாரணமாக லாவோஸ் 40 சதவீத வரி விதிப்பாலும், அல்ஜீரியா 30 சதவீத வரி விதிப்பாலும் அதிர்ந்தது. இந்தியா பொருட்களுக்கு 25 சதவீதமாக பரஸ்பர வரியும், 25 சதவீத அபராத வரியும் விதிக்கப்பட்டது. இதனால் வரி 50 சதவீதமாக உயர்ந்தது.
இதற்கிடையில், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள வரி வதிப்புகள் அதிகார மீறலாகும் என கூறி அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் அனைத்துக்கும் வரி விதிப்பதற்கு, அதிபர் டிரம்புக்கு எல்லையற்ற அதிகாரம் கிடையாது என்று மே மாதம் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு:
* டிரம்ப் வரி விதிப்புகள் சட்டவிரோதமானவை.
* அதிக வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் கிடையாது.
* சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி இருக்கிறார்.
* அரசு நிர்வாகம் அப்பீல் செய்வதற்காக, அக்டோபர் 15ம் தேதி வரை நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளது. அதுவரை விதிக்கப்பட்ட வரிகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த கட்டம் என்ன?
இதனை எதிர்த்து அதிபர் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் வரிகள் ரத்து செய்யப்படும். இது அமெரிக்காவுக்கு பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரி என்று பெயரில் வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.