என்னதான் நடக்குது? : ரூ.30 கோடி கொட்டியும் முகத்துவாரத்தில் அடைப்பு: முதல்வர் அப்செட்; தீர்வு காண இரண்டு நாள் 'கெடு'
என்னதான் நடக்குது? : ரூ.30 கோடி கொட்டியும் முகத்துவாரத்தில் அடைப்பு: முதல்வர் அப்செட்; தீர்வு காண இரண்டு நாள் 'கெடு'
ADDED : அக் 27, 2025 07:33 AM

சென்னை: மழை வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக, 30 கோடி ரூபாய் ஒதுக்கியும், அடையாறு முகத்துவாரத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாட்களில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு கெடு விதித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இம்மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களில், வடகிழக்கு பருவமழை துவங்கும்முன், வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகளுக்கு, நடப்பாண்டு நீர்வளத்துறைக்கு, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தாமதம்
இதில், அடையாறு முகத்துவாரம் அமைந்துள்ள சீனிவாசபுரத்தில், 150 மீட்டர் அகலத்திற்கு துார்வாரும் பணிகளை மேற்கொள்ள, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள், கடந்த ஜூனில் ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் முறையாக செய்யவில்லை.
முகத்துவாரத்தில் மணல் மேடு அதிகரித்ததால், சமீபத்திய மழையால் அடையாறு ஆற்றின் வெள்ளநீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டுள்ள உபரிநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெருமழை கொட்டினால், அடையாறு கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து, ஒப்பந்த நிறுவனத்திடம், சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.செலவு அதிகமாகிவிட்டால், ஒதுக்கிய நிதியில் இவ்வளவு பணிதான் செய்ய முடியும் என, ஒப்பந்த நிறுவனம் கூறி வருகிறது. இதையடுத்து, நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி நிதித்துறையிடம் கோரப்பட்டு உள்ளது. இந்த தகவல் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது.
இரண்டு நாள் கெடு
இதையடுத்து, கடந்த 24ம் தேதி, சீனிவாசபுரத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், முகத்துவாரத்தை அகலப்படுத்த உத்தரவிட்டார். அதன்பிறகும், பணிகள் ஆமைவேகத்தில் ஒப்புக்கு நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் அங்கு சென்ற முதல்வர், பணிகள் முறையாக நடக்காததை கவனித்து, சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்துள்ளார்.
இரண்டு நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம், செயற்பொறியாளர் அருண்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னை மட்டுமின்றி நான்கு மாவட்டங்களிலும், வெள்ள தடுப்பு பணிகள் முறையாக நடந்து முடிந்துள்ளதா என ஆய்வு செய்யவும், ஏதேனும் பகுதிகளில் அரைகுறையாக இருந்தால் பணிகளை விரைந்து முடிக்கவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

