திருநெல்வேலியில் நடப்பது அரசு பொருட்காட்சியா? கிறிஸ்துவ பிரசார கூடமா?
திருநெல்வேலியில் நடப்பது அரசு பொருட்காட்சியா? கிறிஸ்துவ பிரசார கூடமா?
ADDED : அக் 16, 2024 01:16 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி சிஎஸ்ஐ கிறிஸ்துவ பள்ளி வளாகத்தில் நடத்தப்படும் கண்காட்சி அரசு பொருட்காட்சியா? கிறிஸ்துவ பாடல்கள் ஒலிக்கும் மத பிரசார கூடமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருநெல்வேலியில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடக்கும் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டத்தை ஒட்டி மாநகராட்சிக்கு எதிர்ப்புறம் உள்ள திடலில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வாடிக்கை. தற்போது அங்கே மாநகராட்சி வர்த்தக மையம் அமைந்துள்ளது. இருப்பினும் அதே பகுதியில் கடந்த ஆண்டு வரை அரசு பொருட்காட்சி நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., அப்பாவு, சபாநாயகர் ஆன பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அனைத்து அரசு விழாக்களையும் கிறிஸ்துவ மையங்களில் நடத்துவது அரசு வாய்மொழி உத்தரவாக செயல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக சிஎஸ்ஐ நூற்றாண்டு மண்டபம், சிஎஸ்ஐ கிறிஸ்துவ பள்ளிகளில் தான் அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக லட்சக்கணக்கில் வாடகையாக வழங்கப்படுகிறது.
அரசு வர்த்தக மைய வளாகங்கள் இருந்தும் திருநெல்வேலியில் இந்த ஆண்டு அரசு பொருட்காட்சி தற்போது மழைக்காலத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு எதிரே உள்ள பிளாரன்ஸ் ஸ்வேன்ஷன் சிஎஸ்ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
இந்த இடத்தில் நடப்பது அரசு பொருட்காட்சியா, கிறிஸ்துவ கண்காட்சி மதப்பிரசார கூடமா என அங்கு செல்வோருக்கு நிச்சயம் சந்தேகம் ஏற்படும். அந்த அளவுக்கு தினமும் அங்கு கிறிஸ்துவ பாடல்கள் ஒலிக்கின்றன. எப்போதும் இல்லாத படி பள்ளி காம்பவுண்ட் சுவரில் புதிதாக மதமாற்ற விளம்பரங்கள் பெரிய அளவில் எழுதப்பட்டுள்ளன. எனவே இத்தகைய அரசு அதிகாரிகளின் செயல்பாட்டை ஹிந்து முன்னணி அமைப்பினர் கண்டித்துள்ளனர்.