ADDED : டிச 08, 2024 02:32 AM
சென்னை: ''தேர்தலை சந்தித்தாக வேண்டும்; கூட்டணியை தொடர்ந்தாக வேண்டும் என்பதில், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதற்கான சண்டைதான் தற்போது நடக்கிறது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, எழுதிய 'ஐகனோக்ளாஸ்ட்' என்ற அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நுால், தமிழில் மொழிபெயர்த்து நேற்று வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், திருமாவளவன் பேசியதாவது:
எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தாலும், எம்.பி.,க்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தாலும் எந்த மாற்றமும் வந்துவிடாது. தனிநபர் அதிகாரம் பெறுவது, பதவி பெறுவது முக்கியமல்ல. சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
தேர்தலை சந்தித்தாக வேண்டும்; கூட்டணியை தொடர்ந்தாக வேண்டும் என்பதில், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதற்கான சண்டைதான் தற்போது நடக்கிறது. அவர்கள் விரும்புவதை செய்ய வேண்டும்; சொல்ல வேண்டும்; முடிவாக எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஏன் முடிவு எடுக்கவில்லை; கருத்து சொல்லவில்லை என்றும் கேட்கின்றனர். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் எதிர்வினை ஆற்றுவதற்கு, நாங்கள் கட்சி நடத்தவில்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். எனவே, பதற்றப்பட வேண்டிய தேவை இல்லை. எதை எந்த நேரத்தில் அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை; அங்கே போனால் அள்ளலாம்; இங்கே போனால் வாரலாம் என்ற எண்ணம் இல்லை. இந்த விஷயத்தில் ராமதாசை பின்பற்ற வேண்டும் என்று, ஆலோசனை சொல்கின்றனர். நாங்கள், 100 சதவீதம் அம்பேத்கரை பின்பற்றக்கூடியவர்கள். எங்களுக்கு அவர் கருத்தியல் அடையாளம்.
தடுமாறுகிறார் திருமா என்கின்றனர். இதை நம்பி தொண்டர்கள் ஏமாறக் கூடாது. நம்மை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக, அவர்கள் குறைத்து மதிப்பிடலாம். நமது சுயமரியாதையையும், தன்மானத்தையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.