முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்? அண்ணாமலை கேள்வி
முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்? அண்ணாமலை கேள்வி
ADDED : ஜூலை 11, 2025 09:07 PM

சென்னை: ''திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், தி.மு.க., அரசின் போலீஸ் மீதுதான். போலீசுக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் வைத்திருக்கிறார்?'', என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உடல் கண்டெடுக்கப்பட்ட திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளர் நவீன் குறித்து, தமிழக போலீஸ் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
நவீன் உடல், கைகள் பின்பக்கம் கட்டப்பட்ட நிலையில், நைலான் கயிற்றில் தொங்கவிடப்பட்டு இருந்திருக்கிறது. உடல் கிடைத்த அறையில், எந்த நாற்காலிகளும் இல்லை. முழுக்க முழுக்க சந்தேகமான முறையில் கிடைத்த உடலை வைத்து, தற்கொலை என்ற உறுதியான முடிவுக்கு எப்படி வந்தது திமுக அரசின் போலீஸ்?
பணம் கையாடல் செய்ததாகக் கூறப்படும் புகார் வந்து இரண்டு வாரங்கள் கடந்தும், போலீஸ் விசாரணை செய்யவில்லை என்றும், நவீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், போலீஸ் குறித்து எந்தக் குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை என்று போலீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு பெருமையுடன் தெரிவிக்கிறது. இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தவில்லை என்பதில் போலீசுக்கு அசிங்கமில்லையா?
சுமார் ரூ.40 கோடிக்கும் அதிகமான பணம் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், இரண்டு வாரங்களாக போலீஸ் எந்த விசாரணையும் செய்யாமல் இருந்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. நவீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் , அவரது கைபேசியிலிருந்து அனுப்பப்பட்டதா அல்லது அவரது கணினியிலிருந்து அனுப்பப்பட்டதா? அந்த மின்னஞ்சலில், திருமலா பால் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் நவீனை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போலீஸ் முன்பே விசாரித்திருந்தால், இதனை நவீன் நேரடியாகக் போலீசாரிடம் தெரிவித்திருக்க மாட்டாரா? நவீனை, தனியாக விசாரணை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் கொளத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் பாண்டியராஜன், அவசர அவசரமாக விடுப்பில் சென்றது ஏன் என்ற கேள்விக்கு, இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கில், துணை கமிஷனர் பாண்டியராஜன் தொடர்பு குறித்து, சென்னை மேற்கு மண்டல காவல் இணை கமிஷனர் மேற்கொண்டு அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளிலா, இரண்டு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா? எத்தனை நாட்களில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என்பது குறித்து ஏன் எந்தத் தகவலும் இல்லை? திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், தி.மு.க., அரசின் போலீஸ் மீதுதான். போலீசுக்குப் பொறுப்பான முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.