UPDATED : மார் 04, 2024 01:36 AM
ADDED : மார் 04, 2024 01:35 AM

சென்னை, : 'தேர்தல் வாக்குறுதிப்படி, புதிய மாவட்டங்களை உருவாக்காமல், தி.மு.க.,வை தடுக்கும் சக்தி எது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
தஞ்சை, கடலுார், திருவண்ணாமலை, திருவள்ளூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, துாத்துக்குடி உள்ளிட்ட பெரிய மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'தஞ்சையை பிரித்து கும்பகோணம், கடலுாரை பிரித்து விருத்தாசலம், திண்டுக்கல்லை பிரித்து பழனி என, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்' என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை. புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தடுக்கும் சக்தி எது என்பது தெரியவில்லை.
தஞ்சை மாவட்டத்தின் ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லையை சென்றடைய 100 கி.மீ.,ரும், கடலுார் மாவட்டத்தில், ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லையை சென்றடைய, 130 கி.மீ.,ரும் பயணிக்க வேண்டியுள்ளது. 41 லட்சம் மக்கள் தொகை உடைய பெரிய மாவட்டமான திருவள்ளூரும் பிரிக்கப்படவில்லை.
மேலும், 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில், மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்தால் தான் சிறப்பான நிர்வாகத்தை வழங்க முடியும். எனவே, இனியும் தாமதிக்காமல், தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

