அப்பாவு பேச்சால் என்ன களங்கம்? அ.தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் கேள்வி!
அப்பாவு பேச்சால் என்ன களங்கம்? அ.தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் கேள்வி!
ADDED : அக் 18, 2024 05:21 AM

சென்னை : 'சபாநாயகர் அப்பாவு பேச்சால், அ.தி.மு.க.,வுக்கு எப்படி களங்கம் ஏற்பட்டது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் அப்பாவு பேசும்போது, முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வில் சேர தயாராக இருந்ததாகவும், அதை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ரத்து செய்ய
அவரது பேச்சு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனக் கூறி, அந்த கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஆர்.எம்.பாபுமுருகவேல், வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜராகி உள்ளார்.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யவும், விசாரணை முடியும் வரை தடை விதிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
சபாநாயகர் அப்பாவு சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் ஆஜராகி, 'வழக்கு தொடுத்தவருக்கு எதிராக, அப்பாவு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்பாவுவின் பேச்சு, அரசியல் கட்சியை அவதுாறு செய்ததாக கூற முடியாது.
'கட்சி சார்பில் என்றால், அதன் தலைவர் அல்லது பொதுச்செயலர் தான், அப்பாவுக்கு எதிராக அவதுாறு வழக்கு தாக்கல் செய்ய முடியும். எனவே, அவதுாறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.
பாபுமுருகவேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கட்சி சார்பில் அவதுாறு வழக்கு தொடருவதற்கான அங்கீகாரத்தை கட்சி அளித்துள்ளது' என்றார்.
கட்சி தாவவில்லை
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'பாபு முருகவேல், அவதுாறு வழக்கு தாக்கல் செய்ய, என்ன உரிமை உள்ளது; 40 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரும் வழக்கு தொடரவில்லை. அப்பாவு பேச்சில், யார் பெயரையும் குறிப்பிடவில்லை' என்றார்.
மேலும், 'கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக கருதக் கூடாது. ஐந்து ஆண்டு பதவி காலத்தை, அ.தி.மு.க., பூர்த்தி செய்தது. யாரும் கட்சி தாவவில்லை. அப்பாவு பேச்சால் எப்படி அ.தி.மு.க.,வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது; இது எப்படி அவதுாறாகும்' என கேட்டார்.
அதைத்தொடர்ந்து, மனுவுக்கு வரும் 22ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி பாபு முருகவேலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளி வைத்தார்.