கோவை வரும் முதல்வரிடம் என்ன பேசணும்?: கட்சியினருக்கு பாடம் எடுத்த செந்தில் பாலாஜி
கோவை வரும் முதல்வரிடம் என்ன பேசணும்?: கட்சியினருக்கு பாடம் எடுத்த செந்தில் பாலாஜி
ADDED : அக் 27, 2024 02:26 AM

கோவை: கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், ஹோட்டல் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தில், தி.மு.க., நிர்வாகிகள் 200 பேரிடம் ஆலோசிக்க உள்ளார். அப்போது, என்ன பேச வேண்டுமென, கட்சியினருக்கு பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுரை வழங்கினார்.
வரும் நவ., 5 மற்றும் 6ம் தேதிகளில் கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடைய கருத்தை அறிய வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விருப்பப்பட்டார். இதையடுத்து, நிர்வாகிகளில் 200 பேரை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவிநாசி ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில், நிர்வாகிகளை சந்தித்து, முதல்வர் அறிவுரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சூழலில், கோவை வந்த பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்டம் என கட்சி நிர்வாகிகளை வைத்து மூன்று கூட்டங்களை, தனித்தனியாக நடத்தினார். அப்போது, கட்சியினரிடம் நிறைய விஷயங்களை செந்தில் பாலாஜி பகிர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேசியது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் சரியாக பணிபுரியாத, 'பூத்' ஏஜென்டுகளை உடனடியாக மாற்ற வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் மட்டுமின்றி, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
வார்டு செயலர்கள், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நான் உட்பட கட்சி நிர்வாகிகள் யார் தவறு செய்தாலும், அதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலில், ஏராளமான பூத்களில், தி.மு.க., பின்னடைவை சந்தித்துள்ளது; சில பூத்களில் மூன்றாமிடத்துக்குச் சென்றுள்ளது. இதற்கு, கட்சியினர் உள்ளடி வேலை செய்ததே காரணம்.
அவர்கள் மீது கட்சி தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்கும். கோவையில், கட்சியினரிடம் முதல்வர் நேரடியாக பேசும்போது, லோக்சபா தேர்தலை ஒட்டி நடந்த விஷயங்கள் அனைத்தையும் மறைக்காமல் சொல்ல வேண்டும்.
நிர்வாகிகள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி இப்படி பேசியதை அடுத்து, லோக்சபா தேர்தலில் நடந்தது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக பேச உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.