குடியுரிமை சட்டத்திற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என்ன பதில் கூற போகிறார்
குடியுரிமை சட்டத்திற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என்ன பதில் கூற போகிறார்
ADDED : மார் 15, 2024 01:25 AM

தமிழக காங்., துணை தலைவர் ராம.சுகந்தன் அறிக்கை:
மேடைக்கு மேடை சமூக நீதி, சமத்துவம் பற்றி முழங்கும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தற்போது மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு என்ன பதில் கூற போகிறார். குடியுரிமை சட்டத்தில், சமத்துவம் இருக்கிறதா அல்லது சமூக நீதி இருக்கிறதா என்பதை, தமிழக மக்களுக்கு விளக்க முன் வருவாரா? பா.ம.க., தலைவர் அன்புமணி ஏன் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.
அடடா... பா.ஜ., - பா.ம.க., கூட்டணி என்ற பானை பொங்கி வரும் நேரமா பார்த்து, பொசுக்குன்னு தண்ணீரை தெளிக்கிறாரே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: திருமாவளவன் குற்றம் சாட்டுவது தி.மு.க.,வை தான் என்பது கண்கூடாக தெரிகிறது. 'இரண்டு ஒன்றாகாமல் இருப்பதே வெற்றி' என, அவர் சொல்வதில் இருந்து, தங்கள் கட்சியை தி.மு.க., எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதை தெளிவாக விளக்கி உள்ளார். பட்டியலின சமுதாயத்திற்கு தி.மு.க., எதிரி என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்.
திருமாவளவன் விளக்கத்துக்கு இவ்வளவு பொருளுரை தர்றாரே... அவரே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தங்களை விட்டு எந்த கூட்டணி கட்சியும் வெளியேறி விடாமல், தி.மு.க., தலைமை தக்க வைத்திருக்கிறது. கூடுதலாக ராஜ்யசபா என்ற வருங்கால வடையை காட்டி, மக்கள் நீதி மய்யத்தையும், அது மடக்கி இருக்கிறது. ஆனால், சொந்த கட்சியையும் சுக்கு சுக்காக உடைத்துவிட்டு, கூட்டுக்கு ஆள் பிடிக்க, ஒவ்வொரு வீட்டுக்கும் அலைகிறது, பழனிசாமி தலைமை.
அது சரி... பூனை இளைத்தால் எலிக்கு கொண்டாட்டம் என்ற கதையாகி விட்டது, அ.தி.மு.க.,வின் இன்றைய நிலை!
தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது அறிக்கை: குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என, மத்திய அரசு கூறி வருகிறது. ஒவ்வொரு குடிமகனும், தான் இந்த நாட்டின் குடிமகன் தான் என்பதை தன் முன்னோர்களின் ஆவணங்கள் வாயிலாக நிரூபிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறுகிறது. சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாத கோடிக்கணக்கான இந்தியர்கள், இதனால் குடியுரிமையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல இருக்கு இவரது கருத்து!

