மக்கள் மனதில் இருப்பது என்ன: சர்வே எடுக்கிறது உளவுத் துறை!
மக்கள் மனதில் இருப்பது என்ன: சர்வே எடுக்கிறது உளவுத் துறை!
ADDED : ஜூலை 23, 2025 02:38 PM

சென்னை: தமிழக அரசியல் கள நிலவரம், தேர்தல் வந்தால் யாருக்கு சாதகம் பாதகம் என்பது குறித்து உளவுத்துறை போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆளும் கட்சியின் பதவிக்காலம் வரும் 2026ல் முடிவடைகிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஆளும்கட்சி பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதை எதிர்பார்த்து எதிர்க்கட்சியினரும் தங்கள் பிரசாரத்தை முன்கூட்டியே துவக்கி விட்டனர்.
இத்தகைய சூழ்நிலையில் மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களிடையே சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். உளவுத்துறை போலீசார், கிராமங்களுக்கு நேரில் சென்று கருத்து சேகரித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், சட்டசபை தொகுதி வாரியாக பிரசாரம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.
அவர் மக்கள் மற்றும் விவசாயிகளிடம் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் என்ன திட்டங்களை செய்யும் என்பதை வாக்குறுதி அளித்து வருகிறார்.
இதனால் மக்களை இ.பி.எஸ்., சந்தித்து பேசும் போது மக்களின் ஆதரவு எப்படி உள்ளது, என்னென்ன தேர்தல் வாக்குறுதிகள் தெரிவித்தார் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
தி.மு.க., அரசின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பது குறித்தும் உளவுத்துறையினர் தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.