'108' ஆம்புலன்ஸ் சேவைக்கு 'வாட்ஸாப்' செயலி துவக்கம்
'108' ஆம்புலன்ஸ் சேவைக்கு 'வாட்ஸாப்' செயலி துவக்கம்
ADDED : மார் 06, 2026 02:20 AM

சென்னை: நிகழ்விடத்தை துல்லியமாக தெரிவித்து, '108' ஆம்புலன்ஸ் சேவையை பெறும் வகையில், 94450 30725 என்ற 'வாட்ஸாப்' செயலியை, தமிழ்நாடு சுகாதார திட்டம் துவக்கியுள்ளது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'வாட்ஸாப்' செயலியை நேற்று துவக்கி வைத்தார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின், 108 ஆம்புலன்ஸ் சேவையில், 1,353 வாகனங்கள் உள்ளன. ஆம்புலன்ஸ் வாகனம், அழைத்தவரை சென்றடையும் கால அளவு சராசரியாக பெருநகரங்களில், 6.59 நிமிடங்களாகவும், நகர்புறங்களில், 9.40 நிமிடங்களாகவும், கிராமப்புறங்களில், 11.31 நிமிடங்களாகவும் உள்ளது.
அதேபோல, மலைப்பிரதேசங்களில், 13.18 நிமிடங்களாகவும், சாலை விபத்துக்களுக்கு 9.58 நிமிடங்களாகவும் உள்ளது.
இந்நிலையில், 94450 30725 என்ற வாட்ஸாப் செயலி வாயிலாக, ஆம்புலன்ஸ் சேவையை எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும். இந்த எண்ணுக்கு, 'ஹை' என ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதும், 'புக் ஆம்புலன்ஸ்' என்ற, 'லிங்க்' வரும்.
அதன் வாயிலாக, ஆம்புலன்ஸ் வாகனத்தை பெறுவதுடன், தங்களின் நிகழ்விடத்தையும் துல்லியமாக, ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு தெரிவிக்க முடியும்.
அத்துடன், ஆம்புலன்ஸ் வாகனத்தின் எண், ஓட்டுநர் எண் ஆகியவை குறுஞ்செய்தியுடன் வருவதுடன், ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது; வந்து சேரக்கூடிய நேரத்தையும் கணிக்க முடியும் என, தமிழ்நாடு சுகாதார திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

