காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அனுமதி தருவது எப்போது?
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அனுமதி தருவது எப்போது?
ADDED : அக் 10, 2024 08:46 PM
சென்னை:உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக, காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன. ஆனால், வன உயிரின சட்டப்படி, காட்டுப் பன்றிகள் பாதுகாக்கப்படும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், காட்டுப் பன்றிகளை கொன்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு சட்ட வழிமுறைகள் உள்ளன.
கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல, அரசு அனுமதிக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க, தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி தலைமையில், 19 பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டி, கேரளாவில் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தும் முறைகளையும், உள்ளாட்சிகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது. அதன் அடிப்படையில், தமிழக அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
தமிழகத்தில் பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த, பசுமை தமிழகம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு, பாதை அமைப்பது உள்ளிட்ட விஷயங்களில் சலுகை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் பரிந்துரைக்காக காத்திருக்கிறோம். கமிட்டி அறிக்கை கிடைத்தவுடன், அரசின் ஒப்புதல் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.