UPDATED : பிப் 05, 2024 03:01 PM
ADDED : பிப் 05, 2024 12:12 PM

சென்னை: 2019 போல இம்முறையும் பார்லி., தேர்தல் அறிவிப்பு வந்தால் ஏப்ரல் 2வது, 3வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் பா.ஜ., தலைமை தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வரலாம். 2019 போல இம்முறையும் தேர்தல் அறிவிப்பு வந்தால் ஏப்ரல் 2வது, 3வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
பார்லிமென்ட் தேர்தலுக்கு பா.ஜ., தயாராக இருக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்காக நிர்வாகிகள் ஒவ்வொரின் உழைப்பும் அளப்பறியது. தேவையற்ற காரணங்களுக்காக பா.ஜ.,வினரை திமுக அரசு கைது செய்து வருகிறது.
'என் மண் என் மக்கள்' நடைபயணம் 183 தொகுதிகளை கடந்துவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்து சென்றுள்ளோம். 200வது தொகுதியாக பிப்.,11ம் தேதி சென்னைக்கு வருகிறோம். 234வது தொகுதியாக திருப்பூரில் முடித்துவிட்டு பல்லடத்தில் நிறைவு விழா நடைபெற இருக்கிறது. இந்தியாவிற்கு ஒரே ஒரு பிரதமர் வேட்பாளர் மட்டுமே இருக்கிறார். 2024ல் மூன்றாவது முறையாக மோடி ஆட்சியில் அமர போகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: பிப்.,25ல் பல்லடத்தில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக 5 லட்சம் இருக்கைகள் போடப்படும்; 10 லட்சம் தொண்டர்கள் விழாவில் பங்கேற்பார்கள். லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு மோடி தென் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையை ஏற்கும் அனைவரும் பா.ஜ., கூட்டணியில் இடம்பெறுவர். அதிமுக - பாஜ., கூட்டணி பற்றி இபிஎஸ்.,சிடம் பேசி சமாதானம் செய்யுமாறு ஜி.கே.வாசனிடம் நாங்கள் கூறவில்லை. கூட்டணி தொடர்பாக அதிமுக.,வுடன் பேசும் வாசனை பா.ஜ., தடுக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

