ADDED : அக் 08, 2024 12:38 AM

சென்னை: மத்திய அரசு, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரித்துள்ள நிலையில், ரேஷன் கடைகளில் ஒருவருக்கு எத்தனை கிலோ வழங்கப்படும்; எப்போது வழங்கப்படும் என்ற விபரத்தை, அரசு தெரிவிக்காமல் உள்ளது. இதனால், கார்டுதாரர்கள் கடை ஊழியர்களுடன் தகராறு செய்கின்றனர்.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசிக்கு பதில் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதை மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஒதுக்கீடு செய்கிறது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், ஒரு கார்டுதாரருக்கு மாதம் 10 கிலோவும், மற்ற இடங்களில் 5 கிலோவும் கோதுமை வழங்கப்பட்டது.
இதற்காக மாதம், 13,500 டன் கோதுமை வழங்கப்பட்டது. பின், இந்த அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, கடந்த ஆண்டில் மாதம், 8,500 டன் ஒதுக்கப்பட்டது. இதனால், கார்டுதாரர்களுக்கு 2 கிலோ கூட கிடைக்கவில்லை.
தமிழகம் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இம்மாதம் கோதுமை ஒதுக்கீட்டை, 17,100 டன்னாக உயர்த்தியுள்ளது. அதற்கு ஏற்ப கூடுதல் கோதுமை வழங்குமாறு கடை ஊழியர்களிடம், கார்டுதாரர்கள் கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:
மத்திய அரசின் கூடுதல் கோதுமை ஒதுக்கீட்டை தெரிந்து கொண்ட கார்டுதாரர்கள், 5 கிலோ, 10 கிலோ தரும்படி கேட்கின்றனர். கடைகளுக்கு இன்னும் கோதுமை தேவையான அளவுக்கு வழங்கப்படவில்லை.
ஆனால், கூடுதல் கோதுமை கேட்டு கார்டுதாரர்கள் தகராறு செய்கின்றனர். கார்டுதாரர்களின் குழப்பத்தை களையும் வகையில், ஒரு கார்டுதாரருக்கு எவ்வளவு கோதுமை, எப்போது முதல் வழங்கப்படும் என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும். அப்போது தான் தேவையற்ற குழப்பம் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.