தமிழக ஆட்சியில் பங்கு கிடைப்பது எப்போது: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு!
தமிழக ஆட்சியில் பங்கு கிடைப்பது எப்போது: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு!
UPDATED : ஜன 14, 2025 09:28 PM
ADDED : ஜன 14, 2025 09:01 PM

சென்னை: ஸ்டாலின் போன்ற ஒரு பலவீனமான தலைமையின் கீழ் தி.மு.க.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், நிச்சயம் ஆட்சியில் பங்கு கொடுத்து தான் ஆக வேண்டும் என்று துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி பேசினார்.
துக்ளக் இதழின் 55வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில், பா.ஜ., கொண்டு வருகிறது என்பதற்காகவே அதற்கு எதிர்ப்பு தேவைப்படுகிறது
இந்த நாட்டில் 1967ம் ஆண்டு வரை ஒரே தேர்தல் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தனியாக தேர்தல் நடத்தக்கூடாது. அதற்கு செலவாகும். எனவே, ஒட்டுமொத்த தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியதே கருணாநிதி தான். அதெல்லாம் மக்களுக்கு மறந்துவிட்டது.
ஒரு புதிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் எதிர்க்கிறார்கள். இது சாத்தியமா? இல்லையா? என்பதை இப்போதைக்கு கூற முடியாது.
அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அனைத்து கட்சிகளுக்கும் இது தேவைப்படுகிறது. ஆனால், மோடியை ஆதரிக்காமல் இதை எப்படி ஆதரிப்பது என்ற பிரச்னை இருக்கிறது.
தி.மு.க., பெரிய வெற்றி பெற்றால் அதிகாரத்தில் அவர்கள் யாருக்கும் பங்கு தர மாட்டார்கள். கடந்த 2006ல் தி.மு.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் கருணாநிதி என்ற ஒரு பெரிய தலைமை இருந்ததால் தி.மு.க.,வின் கையை முறுக்கி, அதிகாரத்திற்கு வர நினைத்தவர்களால் அது முடியவில்லை.
ஆனால், ஸ்டாலின் போன்ற ஒரு பலவீனமான தலைமையின் கீழ் தி.மு.க.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் நிச்சயமாக ஆட்சியில் பங்கு கொடுத்து தான் ஆக வேண்டும். இந்த தேர்தல் முடிவு எப்படி இருக்கிறதோ, அதற்கு தகுந்தபடியே ஆட்சியில் பங்கு என்ற நிலை வரும்.
ஷேக் ஹசீனா என்பவர் ஒரு தனி நபர் அல்ல. ஜனநாயக தேர்தல் மூலமாக 15 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு தலைவர். வங்கதேசத்தின் மதிப்பையும், மரியாதையும் பெற்றவர். சதியின் மூலமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது அந்நாட்டின் ஜனநாயகத்திற்கு மட்டுமல்லாது, நம் நாட்டுடனான உறவுக்கும் ஒரு பாதகம் தான். அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றால் தான் நாம் ஷேக் ஹசீனாவை அங்கு அனுப்ப முடியும்.
அங்கு சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். வங்கதேசத்தில் எத்தனை நாட்கள் இதே நிலை நீடிக்கிறது என்று தெரிந்தால் தான், ஷேக் ஹசீனா எப்போது அங்கு செல்ல முடியும் என்பது தெரியும்.
இவ்வாறு குருமூர்த்தி பேசினார்.

