ADDED : அக் 28, 2025 04:16 AM

சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள, 15 பறவைகள் சரணாலயங்களில், ஆறு இடங்களுக்கு மட்டுமே வெளிச்சுற்று பகுதிக்கான எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது. மீதி இடங்களுக்கு எல்லை வரையறை பணிகள் தாமதமாகியுள்ளன.
தமிழகத்தில் வேடந்தாங்கல், கரிக்கிலி, கூந்தன்குளம், வேட்டங்குடி உள்ளிட்ட, 15 இடங்களில், பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. இவை, அனைத்தும் வனத்துறையால் பராமரிக்கப்படுகின்றன.
இந்த, 15 பறவைகள் சரணாலயங்கள் உட்பட, 20 இடங்கள், 'ராம்சார்' எனப்படும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுஉள்ளன.
இவ்வாறு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இப்பகுதிகளை பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு வனத்துறைக்கு வந்துள்ளது.
வெளிச்சுற்று பகுதி பொதுவாக ஒரு இடம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டால், அதன் பிரதான பகுதியின் பரப்பளவு, எல்லை, வெளிச்சுற்று பகுதியின் பரப்பளவு வரையறுக்கப்பட வேண்டும்.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவுப்படி, பறவைகள் சரணாலயங்களுக்கு, 10 கி.மீ., சுற்றளவுக்கு வெளிச்சுற்று பகுதி இருக்க வேண்டும்.
நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால், பறவைகள் சரணாலயங்களின் பிரதான பகுதி பாதிக்கப்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த விஷயத்தில், எல்லை வரையறுப்பதில் வனத்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
தமிழகத்தில், 15 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் இருந்தாலும், வடுவூர், கஞ்சிரன்குடி, வேட்டங்குடி, வல்லநாடு, ஒசுடு, கோடியக்கரை ஆகிய பறவைகள் சரணாலயங்களுக்கு மட்டுமே, வெளிச்சுற்று பகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டுஉள்ளது.
காரணம் என்ன? இது தவிர, வேடந்தாங்கல், கரிக்கிலி, பழவேற்காடு, வெள்ளோடு, கரைவெட்டி, உதயமார்த்தாண்டபுரம், சித்திரன்குடி, கூந்தன்குளம், மேல்செல்வனுார் - கீழ்செல்வனுார் ஆகியவற்றுக்கு, இன்னும் வெளிச்சுற்று பகுதி அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, பறவைகள் கணக்கெடுப்பாளர்கள் கூறியதாவது:
பொதுவாக ஒரு குறிப்பிட்ட நீர்நிலை அல்லது இடத்தை, பறவைகள் சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் போது, கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது.
அந்த பகுதியை மட்டுமல்லாது, அதன் சுற்றுப்புறத்தில், 10 கி.மீ., சுற்றளவுக்கு நகரமயமாக்கல் போன்ற பணிகள் தடுக்கப்பட வேண்டியது அவசியம்.
குறிப்பாக, பறவைகள் அங்கு வரும் போது, அக்கம் பக்கத்திலும் அதற்கு ஏற்ற சூழல் இருக்க வேண்டும். மேலும், நகரமயமாக்கல் காரணமாக, பாதுகாக்கப்பட்ட பகுதியின் சூழலியல் தன்மைக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஆனால், வேடந்தாங்கல், பள்ளிக்கரணை போன்ற இடங்களில், நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால், வெளிச்சுற்று பகுதி வரையறுப்பது தாமதமாகி உள்ளது.
இதில், எல்லை விபரங்கள் தெரியாததால், அதிக அளவிலான கட்டுமான திட்டங்கள் வந்து விடுகின்றன. பறவைகள் சரணாலயங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

