தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சுயசான்று முறையில் 5,000 சதுரடி வீடு அனுமதி தரும் அரசாணை எப்போது வரும்?

சுயசான்று முறையில் 5,000 சதுரடி வீடு அனுமதி தரும் அரசாணை எப்போது வரும்?

சுயசான்று முறையில் 5,000 சதுரடி வீடு அனுமதி தரும் அரசாணை எப்போது வரும்?


UPDATED : நவ 15, 2026 06:48 PM

ADDED : நவ 15, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 06:48 PM ADDED : நவ 15, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சுயசான்று முறையில் வீடு கட்டுவதற்கான அனுமதி வரம்பு, 5,000 சதுரடியாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், சுயசான்று முறையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் திட்டம், 2024ல் அமலுக்கு வந்தது.

இதன்படி, 2,500 சதுரடி மனையில், 3,500 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, அதிகாரிகள் தலையீடு இன்றி, ‘ஆன்லைன்’ முறையில் கட்டுமான அனுமதி பெறலாம்.

அத்தியாவசியமான ஆவணங்கள், விண்ணப்பம், கட்டட வரைபடத்தை, ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தினால் போதும்; உடனடியாக கட்டட அனுமதி கிடைத்து விடும். இதுவரை, மூன்று லட்சத்துக்கு மேற்பட்டோர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தை, 5,000 சதுரடியாக விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்படி, ‘சுயசான்று முறையில் வீடுகளுக்கான கட்டட அனுமதி வரம்பு, 5,000 சதுரடியாக உயர்த்தப்படும்; 1,500 சதுரடி வரையிலான வணிக கட்டடங்களுக்கும், இம்முறை விரிவாக்கம் செய்யப்படும்’ என, சட்டசபையில் வீட்டுவசதி துறை அமைச்சர் ராஜ்குமார் அறிவித்தார்.

அத்துடன் வெளியிடப்பட்ட, உள்ளாட்சிகள் அதிகார வரம்பு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியாகி விட்டன. ஆனால், சுயசான்று கட்டட அனுமதிக்கு மட்டும் இன்னும் அரசாணை வரவில்லை.

இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சுயசான்று முறையில் குடியிருப்புகள், தொழிலக கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில், வீடுகளுக்கான பரப்பளவு வரம்பை, 5,000 சதுரடியாக உயர்த்த, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது, தரைதளத்துடன் இரண்டு மாடிகள் அல்லது அடித்தளத்துடன் மூன்று மாடிகள் என்ற நிலையில் தான், கட்டட அனுமதி வழங்கப்படுகிறது.

இதில், மொத்த பரப்பளவு, 5,000 சதுரடியாக அதிகரிக்கும் போது தளங்களின் எண்ணிக்கை, வீடுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.

இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். அதே நேரத்தில், 5,000 சதுரடிக்கான கட்டடம் என்றால், அதில் வாகன நிறுத்துமிடம் போன்ற விஷயங்களுக்கும் கட்டுப்பாடுகள் தேவை.

வணிக கட்டடங்களுக்கான விதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, புதிய அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us