போலீஸ் மீதான புகார்களை விசாரிக்க ஆணையம் எங்கே: உயர் நீதிமன்றம் கேள்வி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
போலீஸ் மீதான புகார்களை விசாரிக்க ஆணையம் எங்கே: உயர் நீதிமன்றம் கேள்வி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 03, 2025 01:20 AM
மதுரை:தமிழகத்தில், போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாவட்ட, மாநில அளவில் ஆணையம் அமைக்க தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
புகார்களை விசாரிக்க தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த பொதுநல மனு:
உச்சநீதிமன்றம், 'அனைத்து மாநிலங்களிலும் போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்' என, 2006ல் உத்தரவிட்டது.
அதன்படி, டி.எஸ்.பி., பதவி வரையிலான போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க, மாவட்ட அளவில் ஆணையம் அமைக்க வேண்டும்.
எஸ்.பி., மற்றும் அதற்கு மேல் பதவிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க மாநில அளவில் ஆணையம் இருக்க வேண்டும்.
மாவட்ட ஆணையம் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில், மாநில ஆணையம் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் செயல்பட வேண்டும்.
நோட்டீஸ் போலீஸ் காவலில் மரணம், காயம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான புகார்களை மாநில ஆணையம் விசாரிக்கும். நிலம், வீடு அபகரிப்பு அல்லது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை மாவட்ட ஆணையம் விசாரிக்கும்.
சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக துறை ரீதியான அல்லது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவை தமிழகத்தில் நிறைவேற்றவில்லை. போலீஸ் காவலில் மரணங்கள் தொடர்கின்றன. திருப்புவனம் போலீசார் தாக்கியதில் கோவில் காவலாளி அஜித்குமார் இறந்தார்.
ஆணையம் அமைத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும். போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாநில, மாவட்ட அளவில் ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் ஆஜரானார்.
மத்திய உள்துறை செயலர், தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், செப்., 23க்கு வழக்கை ஒத்திவைத்தனர்.