திருநீர்மலை ஏரியில் மண் அள்ளுவதில் யாருக்கு லாபம்?
திருநீர்மலை ஏரியில் மண் அள்ளுவதில் யாருக்கு லாபம்?
UPDATED : பிப் 21, 2024 05:07 AM
ADDED : பிப் 21, 2024 01:51 AM

பல்லாவரம்:'என் மண், என் மக்கள்' யாத்திரை, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், பல்லாவரத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. பல்லாவரத்தில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், 23க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அப்பகுதிகளில், 300 மீட்டர் சுற்றளவில் வீடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது.
கடந்த 2014ல், மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சிகளால், 100 மீட்டராகக் குறைக்கப்பட்டது.
குரோம்பேட்டை ராதா நகர், சுரங்கப்பாதை பணியை, 15 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி வருகின்றனர். திராவிட மாடல் அரசு என கூறக்கூடாது. திராவிட ஆமை அரசு என்று தான் கூற வேண்டும்.
கடந்த 2015ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான நிலத்தை, தி.மு.க., அரசு, 5 ஆண்டுகள் கழித்து தான் ஒப்படைத்தது.
இந்த தொகுதியில் உள்ள பிரச்னைகளை பற்றி பேசக்கூடிய ஒருவர், ஸ்ரீ பெரும்புதுார் எம்.பி.,யாக வர வேண்டும். பல்லாவரம் தொகுதி, சமீபத்தில் தமிழகம் முழுதும் பேசப்பட்டது. எம்.எல்.ஏ., மகன் வீட்டில் வேலை செய்த பட்டியலின சகோதரியை அடித்து, கொடுமைப்படுத்தியுள்ளனர்.
வடசென்னை வளர்ச்சி திட்டம் அறிவித்துள்ளனர். அது, வடசென்னை வளர்ச்சி திட்டமாக அல்லது வடசென்னையில் இருக்கும் தி.மு.க., - எம்.எல்.ஏ., வளர்ச்சி திட்டமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பல்லாவரம் தொகுதியை, கமிஷன் வாங்குவதில், அமைச்சர் அன்பரசன், எம்.எல்.ஏ., மற்றும் மேயர் என மூன்று பேர், கூறுபோட்டு விற்கின்றனர்.
'வாழ்த்துகள்' என்ற வார்த்தையைக்கூட எழுதத் தெரியாதவர் தான், அமைச்சர் அன்பரசன்.
அடுத்த தி.மு.க., கோப்புகளில் திருநீர்மலை ஏரியில் மண் அள்ளுவது யார், 'கட்டிங்' யார் யாருக்கு போகிறது என்பது வெளியிடப்படும்.
நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமராக வரப்போகிறார். பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம்.
கடந்த 33 மாதங்களில், தி.மு.க., ஆட்சியில், ஒரு துறையாவது ஒழுக்கமாக இருக்கிறதா என சொல்லுங்கள். பத்திர பதிவுத்துறை உட்பட அரசு துறை எல்லாமே லஞ்சம் இல்லாமல் வேலை நடக்கிறதா?
இவ்வாறு அவர் பேசினார்.

